சினிமா, அரசியல் பிரபலங்களுக்குக் கொடுக்கப்பட்ட பட்டங்கள், பின்னணியில் உள்ள சுவாரசிய சங்கதிகளின் தொகுப்பு இது.
[ο] நடிகர் எம்.ஆர். ராதா நாடகக்குழு தஞ்சாவூரில் முகாமிட்டிருந்தது. புதிய நாடகம் நடத்த முடிவு செய்த ராதா, மு.கருணாநிதியைச் சந்தித்து விஷயத்தைச் சொல்ல, ‘தூக்குமேடை’ நாடகத்தை எழுதிக்கொடுத்தார் கருணாநிதி. இந்த நாடக விளம்பரங்களில் தான் வில்லங்கம் வந்தது.
பெரியாரிடமிருந்து பிரிந்து சென்ற அறிஞர் அண்ணா மீது ராதாவுக்கு தீராத கோபம். அதனால் அண்ணாவுக்கு உரிய பட்டத்தைத் தூக்கி ‘அறிஞர்’ கருணாநிதி எழுதிய ‘தூக்குமேடை’ நாடகம் என விளம்பரம் செய்யப்பட்டது.
கருணாநிதிக்கு இது தெரியவர, “அறிஞர் என்றால் அது அண்ணாவை மட்டுமே குறிக்கும். நாடகத்தை நடத்தாதீர்கள்` என ராதாவுக்கு தகவல் அனுப்பினார். நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டதால் நாடகம் அரங்கேறியது. நாடக இடைவேளையில் பட்டுக்கோட்டை அழகிரி மூலம் ‘கலைஞர்` எனும் பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கச் செய்தார் எம்.ஆர்.ராதா.
[ο] ‘உறந்தை உலகப்பன்’ எனும் நாடகக் கலைஞர்தான் 5.4.1952 அன்று தனது ‘அரும்பு’ நாடக அரங்கேற்றத்திற்கு வந்திருந்த எம்.ஜி.ஆருக்கு, அதே விழாவுக்கு வந்த கலைஞர் கருணாநிதி மூலம் ‘புரட்சி நடிகர்` என்கிற பட்டத்தை வழங்கச் செய்தார்.
எம்.ஜி.ஆர். தனது படங்களில் மக்களுக்கு நல்ல விஷயங்களைப் போதிப்பதை வழக்கமாகக் கொண்டதால் திருநெல்வேலி ரசிகர்கள் அவரை ‘வாத்தியார்` என அழைக்கத் தொடங்கினர். அதையே சென்னையின் பூர்வகுடி மக்கள் ‘வாத்யார்’ என்று அழைத்து மகிழ்ந்தனர்.
‘மக்கள் திலகம்’ என்கிற பட்டத்தை ‘பேசும்படம்’ பத்திரிகை வாசகர் ஒருவர் எம்.ஜி.ஆருக்கு அந்தப் பத்திரிகை மூலமே வழங்கினார். ஒரு நிகழ்ச்சியில் ஆன்மிகப் பெரியவர் கிருபானந்த வாரியார் ‘பொன்மனச் செம்மல்’ என்கிற பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கினார்.
எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியைத் தொடங்கியதும் முதல் பொதுக்கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. ‘கலைஞர் கொடுத்ததுதான் புரட்சி நடிகர் பட்டம்’ என திமுகவினர் சொல்ல, அந்தக் கூட்ட மேடையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி, “எங்கள் தலைருக்கு நாங்களே பட்டம் தருகிறோம். இன்று முதல் எங்கள் தலைவர் ‘புரட்சித்தலைவர்” என்று அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
[ο] அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் மராட்டிய மன்னன் சிவாஜியாக, கணேசனின் துடிப்பான நடிப்பைப் பார்த்த தந்தை பெரியார் ‘சிவாஜி’ என்கிற பட்டத்தைக் கொடுத்தார். அன்றுமுதல் கணேசன், ‘சிவாஜி கணேசன்’ ஆகி, ‘சிவாஜி’ என்கிற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
‘பொம்மை’ பத்திரிகையிலோ அல்லது ‘பேசும்படம்’ பத்திரிகையிலோ ஒரு வாசகர் கொடுத்த பட்டம் தான் ‘நடிகர் திலகம்’.
[ο] ரஜினி முதன்முதலாக நாயகனாக ஒப்பந்தமான ‘பைரவி’ படத்தின் வெளியீட்டு உரிமையை ‘கலைப்புலி’ எஸ்.தாணுவும் நடிகர் ராஜ்கிரணும் (அப்போது ராஜ்கிரண் நடிகர் அல்ல) வாங்கிக்கொண்டனர். அந்த அளவுக்கு ரஜினியின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியானதும், சென்னை அண்ணாசாலையில் ரஜினியின் பிரம்மாண்ட பதாகையை வைத்து ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற பட்டத்தையும் போட்டு விளம்பரப்படுத்தினார் தாணு.
[ο] கமல்ஹாசன் இளம்பருவத்தில் ‘காதல் இளவரசன்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அதன் பின் காதல் மன்னன் ஆனார். ‘மருதநாயகம்’ படத் துவக்க விழாவில் கமலுக்கு ‘கலைஞானி’ என்கிற பட்டத்தை வழங்கினார் கலைஞர்.
ஆயினும் ரசிகர்கள் வழங்கிய ‘உலகநாயகன்’ பட்டமே பேசப்படுகிறது. அதிலும் ‘தசாவதாரம்` படத்தில் ‘உலகநாயகனே` என்கிற பாடல் இன்னும் கூடுதலாக மக்கள் மனதில் கமல்ஹாசனை உலகநாயகனாக பதியவைத்தது.
[ο] விஜயகாந்த், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். கலைஞர் மீதும் பெருமதிப்பு கொண்டவர். அதனால் எம்.ஜி.ஆரையும் கலைஞரையும் நினைவூட்டும் விதமாக விஜயகாந்த விசுவாசிகளால் உருவாக்கப்பட்ட பட்டம்தான் ‘புரட்சிக் கலைஞர்’.
மற்றொரு நிகழ்ச்சியில் கருணாநிதி `எழுச்சிக் கலைஞர்` என்கிற பட்டத்தை விஜயகாந்த்திற்குத் தருவதாகச் சொன்னார். ஆனால் கலைஞர் பட்டம் கொடுத்த புதிதில் ‘எழுச்சிக் கலைஞர்’ என குறிப்பிடப்பட்டாலும், மீண்டும் ‘புரட்சிக் கலைஞர்` பட்டமே அதிகம் பயன்படுத்தப்பட்டது.
‘கேப்டன் பிரபாகரன்’ படம் அவருக்கு கேப்டன் என்கிற பட்டத்தையும் கிடைக்கச் செய்தது. ஆயினும் ‘புரட்சிக்கலைஞர்’ பட்டத்தையே விஜயகாந்த் விரும்பினார்.
[ο] விஜய் நடிக்கவந்த புதிதில் ‘உங்கள் விஜய்’ என்றே குறிப்பிடப்பட்டார். அதன்பின் ‘இளைய தளபதி’ என்கிற பட்டத்தை அவரின் அப்பா எஸ்.ஏ.சி. பயன்படுத்தினார். இப்போது நடுத்தர வயது வந்த நிலையில் `தளபதி` என்கிற பட்டத்தையே அவரது ரசிகர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அரசியலில் திமுக இளையரணியினர், மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்த பட்டம் ‘தளபதி’. இதை விஜய்யும் பயன்படுத்த ஆரம்பித்ததால் முதலில் திமுக தொண்டர்கள் கடுப்பானார்கள். ஆயினும் அது பெரிதுபடுத்தப்படவில்லை.
[ο] அஜித்துக்கு `அல்டிமேட் ஸ்டார்’ எனப் பட்டம் போட்டு அழகு பார்த்தவர் இயக்குநர் சரண். ஆனால் `தீனா` படத்தில் அஜித்தின் அடியாளாக வரும் மகாநதி சங்கர், ‘இல்ல தல, ஆமா தல` என பேசுவதுபோல் டயலாக் வைத்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அதுமுதல் அஜித்தை ‘தல` என அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.
[ο] வடிவேலுவுக்கு `வைகைப் புயல்` என்கிற பட்டம் அவரின் நெருங்கிய ரசிகர்களால் தரப்பட்டது. ஆயினும் அதற்கு முன்பே `கிழக்குச் சீமையிலே` படத்தின் டைட்டிலில் `கருப்பு நாகேஷ்` என பட்டம் அளித்தார் பாரதிராஜா. இருப்பினும் புயல்தான் நிலைத்திருக்கிறது.
[ο] நடிப்பில் தேசிய விருது பெற்றவர் தனுஷ். அவர் பட்டம் போட்டுக்கொள்வதை விரும்பவில்லை.
[ο] உதயநிதி ஸ்டாலினை அவ்வப்போது ‘சின்னவர்` எனக் குறிப்பிட்டு திமுகவினர் விளம்பரம் செய்கிறார்கள்.
ஒருவர் மக்கள் மனதில் இடம்பிடிக்க விரும்பினால் தனது சேவையாலும் திறமையாலும் மட்டுமே அது சாத்தியம் என்பதை உணர்ந்தால் போதும். மக்கள் மனதில் நீங்கா இடம்பெறலாம். அதன் பிறகு மக்களே அந்த அங்கீகாரத்தைத் தருவார்கள்.