தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரூபா கொடுவாயுர், தமிழில் நடித்துள்ள படம் ‘எமகாதகி’.
மர்ம சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் பல மர்ம சம்பவங்களுடன் சுவாரசியமான திரைக்கதையை அமைத்துள்ளனர். நாயகியாக நடித்த ரூபா கொடுவாயூருக்கு பாராட்டுகள் குவிகின்றனவாம்.
இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இப்படக்குழுவினர் ஒன்றுகூடிய நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய நடிகை ரூபா, இப்படத்தின் கதையை இயக்குநர் விவரித்தபோது தமக்கு ஒன்றுமே புரியவில்லை என வெள்ளந்தியாகப் பேசினார்.
“இது எந்த மாதிரியான படம் என்பதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. படத்தில் பிணமாக நடிக்க வேண்டுமா என்று யோசித்தேன். பின்னர் தயாரிப்பாளர்தான் கதையை விளக்கினார். பிணமாக நடித்தாலும் உங்கள் கதாபாத்திரத்திற்கு காதல், நீதியைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் இருக்கும்படி கதை எழுதப்பட்டுள்ளது என்று கூறினார்.
“அப்போதுதான் எனது கதாபாத்திரத்தின் தன்மை எனக்குப் புரிந்தது. இதுதான் தமிழில் என் முதல் படம். இப்படி ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி,” என்றார் ரூபா.

