'ரோஜா' படத்தின்மூலம் நாடு தழுவிய அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மதுபாலா.
அண்மைய பேட்டி ஒன்றில் நடிகை சாய் பல்லவியின் தீவிர ரசிகை என்று அவர் கூறியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட சாய் பல்லவி, மதுபாலாவின் பாராட்டு எதிர்பாராத ஒன்று என்றும் இது தமது திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.
தெலுங்கில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'ஷியாம் சிங்கா ராய்'. இதில் சாய் பல்லவியின் நடிப்பு அருமையாக இருந்ததாகச் சொல்கிறார் மதுபாலா.
"அந்தப் படத்தைப் பார்த்ததுமே ஒட்டுமொத்த படக்குழுவினரையும் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. சாய் பல்லவி அருமையான நடனக் கலைஞர் மட்டுமல்ல, மிகச் சிறந்த நடிகை என்பதையும் திரையில் கண்டேன்.
"நான் அவரது தீவிர ரசிகையாகிவிட்டேன். அண்மையில் நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் 'ஷியாம் சிங்கா ராய்'க்கு முதல் இடம் கொடுப்பேன்," எனப் பாராட்டி உள்ளார் மதுபாலா.

