தெலுங்கில் வெளியான 'சுவாது முத்யம்' படத்தில் ஆசிரியையாக நடித்துள்ளார் வர்ஷா பொல்லம்மா.
அக்கதாபாத்திரத்தின் குணாதிசயம் பல வகையிலும் தம்முடன் ஒத்துப்போனதாக அவர் கூறியுள்ளார்.
"நம்முடைய உண்மையான இயல்பு, குணங்களுடன் ஒத்துப்போகக் கூடிய கதாபாத்திரங்கள் திரையில் அமைவது மிகவும் அரிது. இந்தப் படத்தில் அத்தகைய வாய்ப்பு எனக்கு அமைந்தது. அதனால் அந்த கதாபாத்திரத்துடன் மிகவும் ஒன்றி நடிக்க முடிந்தது.
"மேலும், கதைப்படி நடப்பவை எல்லாம் என் கண் முன்னே நடக்கும் காட்சிகளைப் போன்று தோன்றியது. கதையின் நாயகியான ஆசிரியை அனைத்தும் நூறு விழுக்காடு கச்சிதமாக நடக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடியவர். உண்மையில், எனக்கும் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு உண்டு. எதையும் தவறுகள் இன்றி கச்சிதமாகவும் உரிய நேரத்திலும் செய்து முடிக்க வேண்டும் எனும் கொள்கை உடையவள்," என்கிறார் வர்ஷா.
இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க். அங்கு எளிமையான மக்களுடன் பேசிப்பழகும் வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்பவர், அப்படிப்பட்ட அனுபவங்கள் வாழ்க்கையின் யதார்த்தம் குறித்த பலவற்றைத் தமக்கு புரிய வைத்ததாகச் சொல்கிறார்.
"பொதுவாக கிராம மக்கள் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாதவர்களைப் போல் எளிமையானவர்களாக இருப்பார்கள். ஆனால், ஒரு விஷயத்தை எப்படி அணுகவேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டால், அதற்கேற்ப சுற்றி நடப்பவற்றில் ஆதிக்கம் செலுத்த தயங்கமாட்டார்கள்.
"அப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய விஷயத்தைப் பற்றி கேள்விப்படும்போது அதை ஊதிப் பெரிதாக்கினால் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் காணலாம்.
"கதைப்படி என் பெயர் பாக்யலட்சுமி. என்னைச் சுற்றியுள்ள அனைத்தும் எனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எளிமையான கிராமத்துப் பெண்ணாக வலம் வருவேன். இந்தக் கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானதாக அமைந்தது. காரணம், ஆதிக்கம் செலுத்தும் அம்சம் மட்டும் அல்லாமல், இக்கதாபாத்திரத்தின் வேறு சில அம்சங்களும் எனது உண்மையான இயல்புடன் ஒத்துப்போயின," என்கிறார் வர்ஷா பொல்லம்மா.
விந்தணுக்கள் தானம், மகப்பேறு தொடர்பான பிரச்சினைகளை அணுகும் கதைக்களத்துடன் உருவாகி உள்ளது 'சுவாதி முத்யம்' படம். விந்து தானத்தை மையப்படுத்தி உருவான 'விக்கி டோனர்' இந்திப் படத்துக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்கிறார் வர்ஷா.
"இரண்டுமே விந்து தானம் குறித்து பேசும் படைப்புகள் என்றாலும், சில முக்கிய அம்சங்கள் மாறுபட்டுள்ளன. 'விக்கி டோனர்' படத்தில், தனது செயல்பாட்டில் உடன்பாடில்லாத ஒரு பெண்ணை சமாதானம் செய்ய ஓர் இளைஞன் முயற்சி செய்வான். ஆனால் 'சுவாதி முத்யம்' படத்தில் மிகப்பெரிய குடும்பம் அதில் சம்பந்தப்பட்டிருக்கும்," என்று சொல்லும் வர்ஷா, பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாக நடித்து வருவதற்கு தாம் மட்டுமே காரணம் அல்ல என்கிறார்.
தமக்கு அத்தகைய கதாபாத்திரங்கள் நன்கு பொருந்துவதால்தான் இயக்குநர்கள் வாய்ப்பு அளிப்பதாகச் சொல்கிறார். பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் காட்சி அளிப்பது தமக்கு சாதகமான அம்சமாக உள்ளது என்றும் கூறுகிறார்.
அடுத்து சந்தீஷ் கிஷனுடன் 'ஊரு பேரு பைரவகோணா' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வரும் வர்ஷாவுக்கு, தமிழிலும் இரு படங்கள் கைவசம் உள்ளனவாம்.
"'பிகில்' படத்தில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான நடிகையாக மாறினேன். எனினும், அதற்குப் பிறகு குடும்பப் பாங்கான வேடங்கள் அமைந்தன. அதே சமயம் வணிகப்படங்களிலும் நடிக்க அழைப்புகள் வருவதால் திரைப்பயணம் மனநிறைவை அளிக்கும் விதமாக உள்ளது," என்கிறார் வர்ஷா பொல்லம்மா.
வர்ஷா பொல்லம்மா
, :

