கிராமத்துப் பெண், நகரத்துப் பெண் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், கச்சிதமாகப் பொருந்துகிறார் என இயக்குநர்களால் பாராட்டப்படுகிறார் இளம் நாயகி ஆரா.
'பைசா' படத்தைப் பார்த்தவர்களுக்கு இவரைப் பற்றி தெரிந்திருக்கும். அதன் பிறகு 'ஒன்வே', 'குழலி' என அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்துள்ளார்.
"நான் சென்னைப் பெண் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். சென்னையில்தான் பள்ளிப்படிப்பை முடித்தேன். பின்னர் அஞ்சல் வழி ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தேன்.
"என் தந்தை தனியார் தொலைக்காட்சியில் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். அம்மா இல்லத்தரசி. ஒரே தங்கை, பள்ளியில் படித்து வருகிறார்," என்று சொல்லும் ஆராவுக்கு, 13 வயதிலேயே சினிமா ஆசை வந்துவிட்டதாம்.
அதை வீட்டில் தெரிவித்தபோது எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. மாறாக, தனது பெற்றோர் ஊக்கம் கொடுத்து வழிநடத்தி உள்ளனர்.
"எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் சினிமா மீதான ஆர்வம் ஏற்பட்டது. பெற்றோர் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்தனர். அவர்களிடம் ஆசி பெற்ற பிறகே சினிமா வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினேன்.
"நடிகை ஆக வேண்டும் என்ற ஆசையால்தான் நேரடிக் கல்லூரி வகுப்புக்குச் செல்ல முடியவில்லை. எனினும், மிக விரைவில் எனக்கான வாய்ப்புகள் தேடி வந்தன.
"சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த 'ஜீவா' படத்தில் அவரது தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து இயக்குநர் ஹரியின் 'பூஜை' படத்தில் சின்ன வேடத்தில் நடித்தேன்," என்கிறார் ஆரா.
அதன் பிறகுதான் 'பைசா' படத்தில் நடிப்பதற்கான தேர்வில் பங்கேற்றாராம். கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்ததால் தேர்வாகி உள்ளார்.
"பின்தங்கிய மக்களின் வாழ்க்கையைப் பேசும் படம் அது. அதில் நாயகியாக நடிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் என் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
"அதன்பிறகு, எனக்கான கதைகள், கதாபாத்திரங்களை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
"எடுத்த எடுப்பிலேயே நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை. சிறு வயதிலேயே நடிக்க வந்ததால் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்துமாறு சிலர் அறிவுரை கூறினர். எனினும், எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்ல வேடங்கள் அமைந்து வருகின்றன," என்கிறார் ஆரா.
இவர் நடித்த 'பைசா' படத்தை 'குழலி' பட இயக்குநர் பார்க்க நேரிட, தனது படத்திலும் நாயகியாக்கிவிட்டார். எனினும் நடிப்புத் தேர்வுக்குப் பிறகே ஒப்பந்தமானாராம்.
"என் நடிப்பு அவருக்கு பிடித்துப்போனது. ஆனால், நடிப்புத் தேர்வு நடக்க இருப்பதாகவும் அதில் பங்கேற்குமாறும் கூறினார். மறுநாள், நடிப்புத் தேர்வுக்குச் சென்றபோது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிக்கச் சொன்னார் இயக்குநர். தயக்கமின்றி நடித்ததைப் பாராட்டிய பிறகு, பள்ளி மாணவிக்குரிய ஆடைகளை அணியச் சொல்லி புகைப்படங்கள் எடுத்தனர்.
நூறு விழுக்காடு மனநிறைவு ஏற்பட்ட பிறகே, நான்தான் நாயகி என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
"சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தபோது நல்ல அனுபவம் கிடைத்தது. எனினும், என் நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற சிறிய வேடங்களில் நடித்தால் பிறகு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று கூறினர்.
"ஆனால் திறமை இருந்தால் வாய்ப்புகள் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதனால்தான் 'குழலி' பட வாய்ப்பு கிடைத்தது.
"நடிகையாக எனது பயணத்தைத் தொடங்கிய போதே நல்ல தரமான, அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்கேற்ப விற்பனைப் பெண், கிராமத்துப் பெண் என படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்து வருகின்றன.
"கோவை சரளா போன்ற அனுபவ நடிகைகளுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் எளிதில் அமையாது. ஆனால், எனக்கு அதிர்ஷ்டம் இருப்பதால் 'ஒன் வே' படத்தில் அது சாத்தியமானது," என்று சொல்லும் ஆராவுக்கு விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க ஆசையாம்.
, :

