தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஷுக்குச் சிறு வயதிலேயே திரையுலகம்மீது ஈர்ப்பு வந்துவிட்டது.
அதற்குக் காரணம் அவரது வீட்டிற்கு அருகிலிருக்கும் திரையரங்கு. அவ்வரங்கு சதீஷுக்குப் பல இனிமையான நினைவுகளை அளித்துள்ளது.
அந்த ஆர்வத்தில், கிரேசி மோகன் நாடகக் குழுவில் இணைந்து ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குமேல் இவர் பணியாற்றி இருக்கிறார். மேலும் ‘சாக்லேட் கிருஷ்ணா’ என்ற நாடகத்திற்கு வசனம் எழுதியதும் இவரே.
‘ஜெரி’ என்ற படத்தில் வசனமே இல்லாத இரண்டு சிறிய காட்சிகளில் தோன்றியதன் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் சதீஷ், தமது கடின உழைப்பால் நாயகனாக நடிக்குமளவிற்கு முன்னேறியுள்ளார்.
அண்மையில் இவர் நாயகனாக நடித்து வெளியான ‘நாய் சேகர் படம்’ இவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது. அப்படத்தில் இவருக்கு நாயகியாக பவித்ரா லட்சுமி நடித்திருந்தார். அது ஒரு கற்பனை நகைச்சுவை திரைப்படம்.
‘நாய் சேகர்’ படத்தில் கதாநாயகனாக நடித்தபின் மேலும் சில படங்களிலும் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியுள்ளது.
இம்முறை இவர் கனமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
இவர் நாயகனாக நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’ என்ற திரில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் சாச்சி.
தொடர்புடைய செய்திகள்
“இத்திரைப்படத்தில் வேறொரு கோணத்தில் எனது நடிப்பைக் காணலாம்,” என்கிறார் சதீஷ்.
வெங்கி இயக்கத்தில் ‘வித்தைக்காரன்’ என்ற திரைப்படத்திலும் இவர் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் முழுக்க, முழுக்க ஒரு ‘டார்க் காமெடி’ திரைப்படமாக உருவாகி வருவதாகத் தெரிகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கும் திரைப்படத்திலும் சதீஷ் நடிக்கிறார்.
நடிப்போடு நின்றுவிடாமல் அவ்வப்போது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் இவர் குரல் கொடுத்து வருகிறார். எடுத்துக்காட்டாக, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இவர் ஆதரவுக் குரல் கொடுத்தார்.
தற்போது சிங்கப்பூரில் இருக்கும் சதீஷ் ஜூன் 22ஆம் தேதியன்று மெகா இந்தியா எக்ஸ்போ கண்காட்சிக்கு வந்திருந்தார். ஜூன் 23ஆம் தேதியும் இவர் அங்கு வருகைபுரிவார்.

