யூடியூப்பில் கலக்கும் சிங்கப்பூரர்

யூடியூப்பில் கலக்கும் சிங்கப்பூரர்

2 mins read
de84b0c8-133a-4d92-9843-b295ebd8c8fc
சத்தியசீலன் சிவலிங்கம் - படம்: சத்தியசீலன் சிவலிங்கம்
multi-img1 of 4

இசைக் கலைஞரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சிங்கப்பூரர்  சத்தியசீலன் சிவலிங்கம் அண்மையில் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஒரு பாடல் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இணைய ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது. 

‘ஒன் டூ போடலாமா’ எனத் தொடங்கும் அப்பாடல் இவ்வாண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த மூன்றரை நிமிட பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 

போதைப் பொருள் புழக்கத்தையும் கடத்தலையும் தவிர்க்கவேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் மலேசியாவில் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது. மலேசியாவின் புகழ்பெற்ற தமிழ்ப் பாடகரான டார்க்கீயுடன் (Darkkey) இணைந்து இப்பாடலை 41 வயதான திரு சத்தியசீலன் பாடியுள்ளார். 

‘டிஜே சத்தியா’ என அழைக்கப்படும் இவர், இளம் வயதிலிருந்தே இசைமீது பேரார்வம் கொண்டவர். ‘என்’ நிலைக்குப்பின் படிப்பைத் தொடராத இவர், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றில்ஒலியமைப்புத் துறையில் ஊழியராக தம் பயணத்தைத் தொடங்கினார். 

அதன்பின் தேசிய சேவையை முடித்த இவர், 2001ஆம் ஆண்டு ‘கிளப்6’ எனும் தனியார் மன்றம் ஒன்றில் தமிழ்த் திரையிசைப் பாடல்கள் பாடிவந்தார்.

“பாடல்களைச் சற்று மெருகேற்றி அதனுள் ‘ராப்’ பகுதியை இணைத்துப் பாடுவேன். அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததுடன் அவர்களுக்கு மிகுந்த உற்சாகமூட்டியது,” என்று திரு சத்தியசீலன் நினைவுகூர்ந்தார்  

இவர் 2006ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ‘தமிழ் ராப்’ பகுதியைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திறமை இருந்தாலும் தமிழ்த் திரைப்பட உலகில் நிலைத்து நிற்பது ஒரு வெளிநாட்டவருக்கு மிகுந்த சவாலான ஒன்றாகவே இருப்பதை தன் அனுபவத்தின் மூலம் திரு சத்தியசீலன்.பகிர்ந்துகொண்டார்  

2009ஆம் ஆண்டு வெளிவந்த இவரின் தனியிசை தமிழ் ராப் பாடலான ‘ஆத்தாடி’ இன்றளவும் சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பப்படுகிறது.  இவர் 2019ஆம் ஆண்டு தம் குழுவுடன் இணைந்து வெளியிட்ட ‘பக்கத்து வீட்டு பசங்க’ எனும் இசைப்பதிப்பு, தம் மனத்திற்கு நெருக்கமானதொரு படைப்பு என்று பகிர்ந்துகொண்டார். 

இசைமீது ஆர்வமுள்ள கலைஞர்கள் முழுநேரப் பணியாக இதனைத் தேர்ந்தெடுப்பதில் பொருளியல் சிக்கல்கள் உள்ளன என்ற இவர், நிலையான வருமானமும் ஆதரவும் இல்லாத எந்த ஒரு துறையையும் வாழ்வாதாரமாக தேர்ந்தெடுப்பது எளிதன்று என்றும் சொன்னார். 

வருங்காலத்தில் ‘டிஜே’ துறைக்கென பிரத்தியேகமான ஒரு பள்ளியை நிறுவ வேண்டும் என்பதே தமது கனவு என்று கூறிய திரு சத்தியசீலன், தனிப்பட்ட முறையில் அதற்கான பயிற்சி வகுப்புகளையும் எடுத்துவருகிறார். தற்போது தமிழ் ‘டிஜே’ துறையில் இருக்கும் கலைஞர்களில் 95 விழுக்காட்டிற்கும் மேல் தன்னுடைய மாணவர்கள் என்று பெருமிதத்துடன் கூறும் இவர், தனது கனவு விரைவில் நனவாகும் என்று நம்பிக்கையுடன் கூறினார். 

குறிப்புச் சொற்கள்