குறைப்பிரசவத்தில் பிறந்த (premature baby) ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானம் அளித்து இரண்டு முறை உலக சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்கப் பெண் ஒருவர்.
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள அலோகாவில் வசித்துவருகிறார் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா.
இரு குழந்தைகளின் தாயான இவர், உலகத்திலேயே அதிகமான குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் அளித்தவர் எனும் பெயரைப் பெற்றுள்ளார்.
கடந்த 2015 பிப்ரவரி மாதம் முதல் 2018 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 1,599.68 லிட்டர் தாய்ப்பாலை இவர் தானமாக வழங்கி உள்ளார்.
இதன்மூலம் குறைப்பிரசவத்தில் பிறந்த பலவீனமான, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
எலிசபெத்தின் இந்த தாய்ப்பால் தானமானது கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
“2015 முதல் 2018 வரை மட்டுமே தாய்ப்பால் தானம் குறித்த கணக்கு எடுக்கப்பட்டது.
“இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் தானம் செய்யப்பட்ட தாய்ப்பாலின் அளவு இதில் சேர்க்கப்படவில்லை,” என்று கின்னஸ் அமைப்பிடம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர்ப் பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, உலகம் முழுவதும் எலிசபெத்தின் தாய்ப்பால் மூலம் ஏராளமான குழந்தைகள் பயனடைந்துள்ளனர் என்று கின்னஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தானமாக அளித்த தாய்ப்பாலின் அளவானது 3.5 லட்சம் அவுன்ஸ் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
‘ஹைப்பர் லாக்டேசன் சிண்ட்ரோம்’ எனும் குறைபாடு காரணமாக தனக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரந்ததாக எலிசபெத், கின்னஸ் அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
இவர், தன்னைப்போல் ஹைப்பர் லாக்டேசனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார்.
அதிகப்படியாக தாய்ப்பால் சுரப்பதைக் கண்டு பயப்படாமல் அதனை இயற்கைப் பேரிடர், தாயை இழந்த குழந்தைகளுக்கு தானமாக வழங்க ‘ஹைப்பர் லாக்டேசன்’ நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறார் எலிசபெத்.
இதன் காரணமாகவே உலகளவில் தாய்ப்பால் தேவதை என இவர் அன்போடு அழைக்கப்படுகிறார்.
தாய்ப்பால் சுரக்காது என்று மருத்துவர்களால் கூறப்படும் பல தாய்மார்களும் எலிசபெத்தை ஒரு கண்கண்ட தெய்வமாக போற்றி வருகின்றனர்.
எலிசபெத்துக்கு 2014ல் ஹைப்பர் லாக்டேஷன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகத்தில் இருந்து யாரும் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத அளவுக்கு தாய்ப்பால் சுரந்தது.
இதன் காரணமாக அவரது உடல் நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்தது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பைவிட ஏறத்தாழ 8 முதல் 10 மடங்கு அதிகம்.
இந்த தாய்ப்பாலை குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தானமாக அளித்து வருகிறார் எலிசபெத்.
பொதுவாக நோய் என்பது வரமா? இல்லை சாபமா? என்ற கேள்வியை உலகில் யாரிடம் கேட்டாலும் அது சாபம் என்ற பதில்தான் வரும். ஆனால், ‘வரம்தான்’ என்ற பதிலை எலிசபெத் பற்றித் தெரிந்த பலரும் சொல்வார்கள்.
அரியவகை நோயைக் கொண்டுள்ள எலிசபெத் சியரா ஆண்டர்சன் தனது தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து தானம் கொடுக்கிறார்.
தனது நோயை நினைத்து வாழ்க்கையில் முடங்கிவிடாமல், நோயையே தனது வாழ்க்கையின் வரமாக மாற்றிக்கொண்டு பல குழந்தைகளின் வாழ்க்கைக்கு உயிர் கொடுக்கும் ‘தாய்ப்பால் தெய்வமாக’ போற்றப்பட்டு வருகிறார் எலிசபெத்.
தகவல்: ஸீ நியூஸ், இந்தியா டுடே ஊடகம்

