‘ஜெயிலர்’ படத்தில் தெலுங்கு, மலையாள படங்களின் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து ரஜினி தனது அடுத்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்புடன் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘வேட்டையன்’ என்று பெயர் வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல், அடுத்து ‘லைகா’ தயாரிப்பில் ரஜினியுடன் கைகோர்த்திருக்கிறார். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
ரஜினி இமயமலை பயணத்திற்கு முன்னர், ‘ரஜினி 170’ படத்தில் நடிக்க விதவிதமான வேடங்களில் படப்பிடிப்பு எடுத்து முடித்துவிட்டு சென்றிருந்தார். மூன்று நாள்கள் நடந்த இந்த போட்டோஷூட்டில் காவலர் சீருடையில் கம்பீரமாக ரஜினி தோற்றம் அளித்திருப்பதாக கூறுகின்றனர் படக்குழுவினர்.
இதைத் தவிர்த்து இப்படம் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட இருக்கிறதாம். இவ்வாறு தலைவர் 170 படத்தை பற்றி வெளியாகும் தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தி வருகின்றது.
இன்று ‘லைகா’ தயாரித்த ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. விழாவில் தலைமை ஏற்க ரஜினிக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
ராகவா லாரன்ஸ், பி.வாசு, லைகா என படத்தின் முக்கியமானவர்கள் அத்தனை பேரும் ரஜினியின் நலம் விரும்பிகள் என்பதால் இவ்விழாவில் ரஜினியும் நிச்சயம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி தரப்பில் இருந்து இன்னும் இதற்கு பதில் வரவில்லை.
இந்த விழாவிற்கு மறுநாள் சனிக்கிழமை ‘ரஜினி 170’ பட பூஜையும் நடக்க இருக்கிறது. அமிதாப் பச்சனைத் தொடர்ந்து ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க விக்ரம், நானியிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் மறுத்துவிடவே சர்வானந்த், கன்னட இளம் இயக்குநரும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டி ஆகியோரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் எனவும் அவர் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்றும் படத்தில் இன்னொரு முக்கியமான வேடத்தில் பகத் பாசில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வில்லனாகவே தமிழில் பல படங்களில் நடித்து வந்த பகத் பாசிலுக்கு இந்தப் படத்தில் வேறொரு வித்தியாசமான வேடமாம். அவருடைய வேடத்தைப் பற்றிய கதையைக் கேட்டதும் உடனே பகத் பாசில் நடிக்க ஒத்துக்கொண்டு இருக்கிறார்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘ஜெய்பீம்’ படத்தில் ஞானவேலுடன் இருந்தவர்களே தொடர்கிறார்கள்.
படப்பூஜை சனிக்கிழமை நடந்தாலும் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு மேல்தான் இருக்கும் என்கிறார்கள்.
இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது ‘ஜெயிலர்’. அந்த பெருமைக்குரிய ‘பொன்னியின் செல்வன்’ படம் தற்பொழுது இரண்டாவது இடத்திற்கு சென்றுவிட்டது.
இந்தியாவில் அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் படமாக உலக நாயகன் கமல் ஹாசனின் ‘விக்ரம்’ இருக்கிறது. ஜெயிலரின் சாதனையை முறியடிக்க ரஜினி நடிக்கும் மற்றொரு படத்தால்தான் முடியும் என்கிறார்கள் ரசிகர்கள்.

