கோடைக்கால கொண்டாட்டம்

3 mins read
d9171a9a-3610-4b8c-bf5c-e6fabb366f55
சூர்யா. - படம்: ஊடகம்

கோடம்பாக்கத்தில் தயாராகும் புதுப்படங்கள் குறித்த அண்மைத் தகவல்களைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வமுண்டு.

முன்னணி கதாநாயகர்கள் இப்போது நடித்து வரும் படங்கள் பெரும்பாலும் அடுத்த ஆண்டு தமிழகத்தில் கோடைக் காலம் நிலவும்போது வெளியாகும் எனத் தெரிகிறது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படப்பிடிப்பு, தாய்லாந்தின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெறுகிறது. அடுத்த சில தினங்களில் படப்பிடிப்பு நிறைவடையுமாம்.

“தற்போது போர்க்களக் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. நவம்பர் கடைசி வரை அங்கே படப்பிடிப்பு நடக்குமெனத் தெரிகிறது. அத்துடன் ‘கங்குவா’வை முடித்துக் கொடுத்துவிடுகிறார் சூர்யா.

“படத்தில் கணினித் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் அதிகம் இருப்பதால், அதற்கென போதிய நேரத்தை எடுத்துக்கொள்ளத் திட்டமிடுகிறார் சிவா. அநேகமாக 2024 ஏப்ரலுக்குப் படத்தைக் கொண்டு வரத் திட்டமிடுகின்றனர்,” என்று விகடன் ஊடகம் தெரிவித்துள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் வசூல் உற்சாகமளித்துள்ள நிலையில், தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. அடுத்து ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேலுவுடன் இவர் கைகோத்துள்ள படத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ரஜினி, மஞ்சு வாரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் திருவனந்தபுரத்தில் படமாக்கி உள்ளனர்.

அதையடுத்து தமிழகத்தின் நாகர்கோவில், நெல்லை சுற்று வட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘முரட்டுக்காளை’, ‘கழுகு’ ஆகிய படங்களின் படப்பிடிப்பிற்குப் பிறகு இப்போதுதான் நெல்லைப் பகுதிகளில் ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. மிக விரைவில் அமிதாப்பச்சன், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மும்பையில் எடுக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

‘இந்தியன் 2’ படத்தின் பின்னணிக் குரல் பதிவுப் பணியை முடித்துள்ள கமல், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் இவர் நடிக்கும் படம் அடிதடி நிறைந்த திகில் படமாக உருவாகிறது.

ராணுவப் பின்னணியில் நடக்கும் கதை இது என்றும் பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கலாம் என்றும் விகடன் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 7ஆம் தேதி கமலின் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி வெளியாகக்கூடும்.

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்காக விஜய் தென்னாப்பிரிக்காவிலும் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கும் படத்துக்காக அஜித், அஸர்பைஜானிலும் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர். இரு படங்களுமே அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியீடு காணக்கூடும்.

‘அயலான்’ படத்தை முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்து ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார்.

இவர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ‘ரங்கூன்’ என்ற படத்தை இயக்கியவர்.

புதுப்படத்தில் சிவாவின் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதுவும் ராணுவம் சம்பந்தப்பட்ட கதையாம். ஒரே கட்டமாக காஷ்மீரில் 75 நாள்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

இந்தப் படத்தை முடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அநேகமாக டிசம்பர் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாம்.

எனவே எதிர்வரும் கோடைக்காலம் கோடம்பாக்க ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமையும். இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. இப்படங்கள் குறித்த அண்மைத் தகவல்களை தொடர்ந்து வெளியிடப் போவதாக அவற்றின் தயாரிப்புத் தரப்பினர் உறுதியளித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்