வாழ்க்கையில் சினிமாவைவிட செய்வதற்கு நிறைய உள்ளது: ஃபஹத் ஃபாசில்

வாழ்க்கையில் சினிமாவைவிட செய்வதற்கு நிறைய உள்ளது: ஃபஹத் ஃபாசில்

2 mins read
2a085cd1-626c-4ed4-a7ec-729aa7bea580
நடிகர் ஃபஹத் ஃபாசில். - படம்: ஊடகம்

பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் மலையாளத்தைத் தாண்டி தமிழ், தெலுங்கு என பிற மொழி திரைப்படங்களில் கலக்கிவருவதுடன், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.

கடந்த இரண்டாண்டுகளாக ‘விக்ரம்’, ‘புஷ்பா’, ‘மாமன்னன்’, மலையாளத்தில் ‘பாச்சாவும் அற்புத விளக்கும்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து வருகிறார்.

அண்மையில் வெளியான ஃபஹத்தின் ‘ஆவேஷம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடி வசூல் குவித்துள்ளதுடன் ஃபஹத்தின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில், திரையுலகம் குறித்தும் தனது நடிப்புத் திறன் குறித்தும் நடிகர் ஃபஹத் ஃபாசில் பேட்டி அளித்துள்ளார்.

“மக்கள் ஒரு சினிமாவைப் பற்றி திரையரங்கிலோ அல்லது திரையரங்கில் இருந்து வீட்டிற்கு வரும் வழியிலோ மட்டும் பேசினால் போதும். உணவு மேசை வரை அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டாம் என நினைக்கிறேன். வாழ்க்கையில், சினிமாவைவிட செய்வதற்கு இன்னும் நிறைய உள்ளது.

“ஒரு நடிகனாக இருப்பதைவிட தயாரிப்பாளராக இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. காரணம், ஒரு நடிகனாக எனக்கு நிறைய எல்லைகள் உண்டு.

“கேமரா கோணத்திலிருந்து உடை வரை அதிகப்படியான ஆட்களைச் சார்ந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு தயாரிப்பாளராக எனக்கு முழு சுதந்திரம் உள்ளது. என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம்.

“நான் ஒரு நடிகனாக இருந்தாலும் பிறர் என்னைப் பற்றி பேசுவதையோ கொண்டாடுவதையோ நான் விரும்பவில்லை. என் படங்கள் பிடித்திருந்தால் பாருங்கள். பிடிக்கவில்லையென்றால் தவிர்த்து விடுங்கள். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

‘மஞ்சுமல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ‘பிரம்மயுகம்’, ‘ஆடுஜீவிதம்’, ‘ஆவேஷம்’, ‘வருஷங்களுக்கு ஷேஷம்’ படங்கள் வசூலில் பெரிய வெற்றி பெற்றதற்கு முதன்மையான காரணம் இவை எல்லாம் நல்ல படங்கள் என்பதால்தான்.

“ஒவ்வொன்றும் வெவ்வேறு பாணிகளைக் கொண்ட திரைப்படங்கள். ஆனால், ரசிகர்கள் அதை வரவேற்கிறார்கள். அவர்கள் வித்தியாசமான முயற்சிகளையும் எதிர்பார்க்கின்றனர்.

“திரைப்படங்களை இயக்கும் எண்ணம் இல்லை. ஆனால், என்னால் எழுத முடியும் என ஷியாம் புஷ்கரன் சொல்வார். பார்க்கலாம்,” எனக் கூறியுள்ளார்.

ஃபஹத் தற்போது இந்தியாவைத் தாண்டி ஹாலிவுட் திரையுலகம் செல்லவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, பிரபல இயக்குநர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பை புகைப்படம் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இது எஸ்.ஜே.சூர்யா மலையாளத்தில் நடிக்கும் முதல்படமாகும்.

குறிப்புச் சொற்கள்