தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குப் புதிய கட்டடம் கட்டுவதற்குத் தேவைப்படும் நிதியைத் திரட்ட தமிழ்த் திரையுலகத்தினர் விரைவில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர். சென்னையில் உள்ள சேப்பாக்கம் திடலில் இந்த கலை விழா நடைபெற உள்ளது.
அதன் பின்னர் மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அவை தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் துணை தலைவரான பூச்சி முருகன் சென்னையில் நடிகர் ரஜினியை சந்தித்து பேசி உள்ளார். அப்போது நடிகர் சங்கத்துக்காக கட்டப்படும் புதிய கட்டடம் தொடர்பான விவரங்களை அவர் ரஜினிக்கு விவரித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் சங்கத்தின் முயற்சிகளுக்கு தம்மால் இயன்ற வரை ஒத்துழைப்பு அளிப்பதாக ரஜினிகாந்த் கூறினார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர்சங்க கட்டடத்துக்காக நடிகர் கமல்ஹாசன், விஜய், தனுஷ், உதயநிதி ஆகியோர் ஏற்கனவே தலா ஒரு கோடி நிதி வழங்கியுள்ளனர்.

