தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘உழவர்களின் தோழன்’: சிவகார்த்திகேயனுக்கு விருது வழங்கி கௌரவித்த தமிழக விவசாய அமைப்புகள்

2 mins read
57781490-e195-4e50-a40b-44046f2c83d6
விருது மேடையில் விவசாய சங்க நிர்வாகிகளுடன் சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாய அமைப்புகள், ‘உழவர்களின் தோழன்’ என்ற விருதை வழங்கியுள்ளது.

நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் நடைபெற்ற விருது விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இளையர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “மாபெரும் மனிதர்களில் ஒருவரான நம்மாழ்வார் ஐயா தொடங்கி வைத்த இந்த மாபெரும் இயக்கத்தை நெல் ஜெயராமன் விரிவுபடுத்தியுள்ளார். இருவரும் சத்தம் இல்லாமல் பெரும் புரட்சியை செய்துள்ளனர்,” என்றார்.

“174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து இன்று அனைவரும் அவற்றைப் பயிர் செய்யும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர். அவ்விருவருக்கும் நாம் எதை அளித்தாலும் அது போதாது என நினைக்கிறேன்.

“இருவரும் விதைத்துள்ள இந்த எண்ணம், இந்தத் திருவிழா ஆகிய அனைத்துமே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கானவை,” என்றார் சிவகார்த்திகேயன்.

‘உழவர்களின் தோழன்’ என்ற விருதை தாம் இன்னும் பெரிய பொறுப்பாக பார்ப்பதாகவும் தம்மால் இயன்றவரை ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் சிவா குறிப்பிட்டார்.

விருது மேடையில் இதை மட்டுமே தன்னால் உறுதியாகச் சொல்ல முடிவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களோடு மக்களாக இருந்த தம்மை மேடையேற்றி அழகு பார்க்கும் விவசாயிகளின் அன்பு நெகிழ வைத்துள்ளது என்றார்.

“ஒரு விவசாயி தன் நலனை மட்டும் பார்க்காமல் அனைத்து சிரமங்களையும் எதிர்கொண்டு உழைக்கிறார்.

“எத்தகைய சிரமங்களாக இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் உழைக்கிறார். விவசாயி என்ற வார்த்தை நாம் நினைப்பதைவிட மிக சக்தி வாய்ந்த ஒன்று,” என்று சிவகார்த்திகேயன் அவ்விழாவில் பேசினார்.

குறிப்புச் சொற்கள்