“நடிகர் ஆர்யாவைப் போல் மிகவும் நட்பாகப் பேசிப் பழகக்கூடிய கதாநாயகர்களைக் காண்பது மிகவும் அபூர்வம். அவ்வளவு அருமையாகப் பழகுவார். அவருடைய உழைப்பும் அன்பும் அபரிமிதமானது,” என்கிறார் இயக்குநர் மனோ ஆனந்த்.
இவர் இதற்கு முன்பு விஷ்ணு விஷாலை வைத்து ‘எஃப்ஐஆர்’ படத்தை இயக்கியுள்ளார். இவர் தற்போது இயக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் ஆர்யாதான் கதாநாயகன்.
‘ரா’ என்று குறிப்பிடப்படும் இந்திய உளவு நிறுவனத்தின் உளவாளி ஒருவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகிறது.
“இந்தியாவில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை இதில் காட்சிப்படுத்தி உள்ளோம். ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற கதாபாத்திரம் இப்படத்தில் உள்ளது. இந்தப் பெயர் அனைவருக்கும் பிடித்துப்போனதால் இதையே தலைப்பாக வைத்துவிட்டோம்,” என்கிறார் இயக்குநர் மனோ ஆனந்த்.
இப்படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களுமே உளவு உலகத்துக்குள் உலாவும் கதாபாத்திரங்கள் தானாம். இந்தக் கதைக்கான நாயகன் யார் என்பதை முன்கூட்டியே தான் தீர்மானிக்கவில்லை என்றும் கதையைக் கேட்ட தயாரிப்பாளர்களால்தான் தனது கதை பெரிய திரைப்படமாக உருவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நானே எதிர்பார்க்காத அளவுக்கு பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்தனர். சரியாகச் சொல்வதென்றால் இந்தக் கதை தனக்கான நடிகர்களைத்தானே தேர்வு செய்துவிட்டதாகக் குறிப்பிடலாம்.
“ஆர்யாவை அடுத்து கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் ஒப்பந்தமான நிலையில், ஆர்யாவின் ஜோடியாக அனகா நடிக்கிறார். இதற்கு முன்பு, தமிழில் வெளியான ‘டிக்கிலோனா’, மலையாளத்தில் ‘பீஷ்ம பருவம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அனுபவம் உள்ளவர் அனகா .
“மேலும் அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் எனப் பலர் இணைந்துள்ளார்கள்,” என்கிறார் மனோ ஆனந்த்.
தொடர்புடைய செய்திகள்
“ஆர்யாவைப் பொறுத்தவரை பரபரப்பான பதற்றமான சூழ்நிலையிலும்கூட அமைதியாகச் செயல்படுவார். அவரை ‘இயக்குநரின் நடிகர்’ என்று குறிப்பிடலாம்.
“ஒருமுறை இரவு 7 மணிக்கு படப்பிடிப்புக்கு வருமாறு கூறியிருந்தேன். அவரும் வந்துவிட்டார்.
“எனினும் மறுநாள் அதிகாலை 5 மணிக்குத்தான் அவரை வைத்து ஒரே ஒரு காட்சியை மட்டும் எடுக்க முடிந்தது. ஆனால் தன்னை அவ்வளவு நேரம் காக்க வைத்தது குறித்து அவர் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. இயக்குநர் திட்டமிட்டால் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைப்பவர் ஆர்யா. அந்த பண்பு அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
“இது உளவாளிகள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. சென்னையில் தொடங்கும் கதை தூத்துக்குடி, ஹைதராபாத், ராஜஸ்தான், அஜர்பைஜான் உள்ளிட்ட பல இடங்களுக்குப் பயணிக்கும். இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் கடும் உழைப்பையும் பொறுமையையும் பங்களிப்பாக தந்துள்ளோம்,” என்கிறார் மனோ ஆனந்த்.
இப்படத்தில் ‘ரா’ உளவு அமைப்பின் தலைவராக நடித்துள்ளார் மஞ்சு வாரியர்.
தயாரிப்பாளரிடம் கதை, கதாபாத்திரங்கள் குறித்து ஆலோசித்தபோது மஞ்சு வாரியர் உளவுத்துறைத் தலைவராக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று மனோ ஆனந்த் கூறினாராம்.
அதைக் கேட்ட தயாரிப்பாளர் லட்சுமண் நேரடியாக மஞ்சுவிடம் கேட்டுவிடலாமே என்றாராம்.
இதையடுத்து கேரளாவுக்குச் சென்று மஞ்சு வாரியரைச் சந்தித்து கதைக்கருவை மட்டும் சொன்னாராம் லட்சுமண். அதைக் கேட்டதும் மஞ்சுவுக்குப் பிடித்துப்போனதாம். அதன் பின்னர் ஒவ்வொரு காட்சியையும் விளக்கச் சொல்லி பொறுமையாகக் கேட்டாராம்.
“அவரது பங்களிப்பு என்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பிரமிக்க வைத்தது. படக்குழுவில் உள்ள அனைவரையும் பெயரைக் குறிப்பிட்டு நலம் விசாரிப்பார். அவர் அன்பான கதாநாயகி,” என்கிறார் மனோ ஆனந்த்.

