தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடி நோயாளிகளின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும்: தினகரன் சிவலிங்கம்

2 mins read
c3aa7f9e-9d6d-423f-8136-e918c1840a84
‘பாட்டல் ராதா’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

“திரைப்படங்கள் சமூகத்தின் மாற்றங்களை உருவாக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சமூக விழிப்புணர்வுக்கு திரை உலகம் ஒரு வாகனமாக இருந்து செயலாற்றும் என உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.

இவர் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மதுப்பழக்கத்தை மையமாக வைத்து ‘பாட்டல் ராதா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இது தொடர்பான அனுபவங்களை ஆனந்த விகடன் ஊடகப் பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார். இனி அவர் சொல்வதை கேட்போம்.

“ஒரு முறை நண்பர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி வந்த ஒரு குடி நோயாளி குறித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

“பெரும்பாலும் அந்த நோயாளி மது அருந்தி விட்டுச் செய்யும் அட்டகாசங்களை விவரிப்பதாகவே அந்த உரையாடல் அமைந்திருந்தது.

“அந்த அட்டகாசங்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் சில துயரங்களை நானும் அறிவேன். ஏனெனில் என் தந்தையும் கூட அப்படிப்பட்ட குடிநோயாளியாக இருந்துள்ளார்.

“சிறப்பாக தறி நெய்து கொண்டு இருந்த அவர், மது அருந்தத் தொடங்கிய பின்னர் அதற்கு அடிமையாகிப் போனார். வீட்டில் உள்ளவர்கள் துவண்டு போனோம்.

“சமூகத்தில் அவர் சந்தித்த அவமானங்களையும் அதனால் நானும் என் தாயாரும் அனுபவித்த துயரங்களையும் என்னால் மறக்க இயலாது.

“அந்த வேதனையின் வெளிப்பாடாக எனது முதல் படத்துக்கான திரைக்கதையை உருவாக்க முடியும் எனத் தோன்றியது. குடும்பம் சிதைந்து தொழில் இழந்து, குழந்தைகள் அழுவதைப் பார்க்க வைத்து விட்டு, இறுதியாக நம்பிக்கையையும் விதைப்பதுதான் எனது எண்ணமாக இருந்தது.

“எனது படைப்பை பார்க்கும் பார்வையாளனும் நானும் சேர்ந்து வாழ்க்கையிலும் கலையிலும் உயர்வதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

“இதையெல்லாம் மகிழ்ச்சியாக, நெகிழ்ச்சியாக, சோகமாக இந்தப் படம் பேசப் போகிறது,” என்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.

‘பாட்டல் ராதா’ நிச்சயமாக ரசிகர்கள் மனதில் தாம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள அவர் படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம், நாயகி சஞ்சனா நடராஜன் ஆகிய இருவரும் தங்களால் இயன்ற அளவு மிகச் சிறப்பாக நடித்துள்ளனர் என்று பாராட்டுகிறார்.

குரு சோமசுந்தரத்தின் நடிப்பு தனது படத்துக்கு வலுசேர்த்துள்ளதாகவும் அவரது நடிப்புக்குப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும் கூறுகிறார் தினகரன் சிவலிங்கம்.

குறிப்புச் சொற்கள்