சிறு வயதிலிருந்தே நடிகராக வேண்டும் என்ற ஆர்வம் ஒரு நடிகரை தேசிய விருது பெற்றவராக மாற்றியுள்ளது. அது வேறு யாருமல்ல, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழும் சியான் விக்ரம்தான் அவர்.
விக்ரம் தற்போது ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் விக்ரம்.
“எனக்கு 12 வயதாக இருந்தபோது, ஒரு மோட்டார் பைக் விபத்தில் சிக்கினேன். கிட்டத்தட்ட பாதி காலை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டேன். என் காலை காப்பாற்றிக்கொள்ள 23 அறுவை சிகிச்சைகளை செய்து, மூன்று வருடங்களுக்கு சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழித்தேன்,” என்று நினைவு கூர்ந்துள்ளார்.
1966ஆம் ஆண்டில் பிறந்தவரான விக்ரம், ஏற்காட்டில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் திரைப்படத்தில் நடிக்க விரும்பியுள்ளார். ஆனால், “அதெல்லாம் முடியாது, உனது பட்டப் படிப்பை முடித்தபின்னர் பார்த்துக்கொள்ளலாம்,” என்று அவரது தந்தை கூறிவிடவே, ஒருவழியாக சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.
அதன்பிறகு, 1990ல் ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த விக்ரம், தொடர்ந்து தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார்.
2003ல் வெளிவந்த ‘பிதாமகன்’ திரைப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவருக்குப் பெற்றுக்கொடுத்தது. இவ்விருது உட்பட மேலும் பல விருதுகளையும் விக்ரம் வென்றுள்ளார்.