சிங்கப்பூர் சிவாவின் தயாரிப்பு, இயக்கத்தில் ‘ஆலன்’ திரைப்படம்

சிங்கப்பூர் சிவாவின் தயாரிப்பு, இயக்கத்தில் ‘ஆலன்’ திரைப்படம்

3 mins read
விரைவில் சிங்கப்பூர், இந்திய, மலேசிய திரையரங்குகளில்
5098a1f5-2cfe-4bd5-8eaa-162ee2da0210
ஓர் எழுத்தாளரின் வலிகளை உணர்த்தும் ‘ஆலன்’ திரைப்படம் செப்டம்பரில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. - படம்: ஆலன் திரைக்குழுவினர்

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர்த் தொழிலதிபர் ஆர்.சிவா, 3S பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆலன்’. ரூ.5 கோடி (S$800,000) செலவில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது.

Watch on YouTube

இந்திய, சிங்கப்பூர், மலேசியத் திரையரங்குகளில் இது செப்டம்பரில் வெளிவரவுள்ளது.

திரையரங்குகளைச் சென்றடையும் முன்னே, இம்மாதம் இந்தியாவின் ‘ரோஹிப்’ அனைத்துலகத் திரைப்பட விழாவில் சிறந்த இந்திய முழு நீளத் திரைப்படப் பிரிவில் ‘கெளரவக் குறிப்பு’ விருது ‘ஆலன்’ திரைப்படத்துக்குக் கிடைத்துள்ளது.

2022ல் வெளியான ‘காரோட்டியின் காதலி’ திரைப்படத்துக்குப் பல விருதுகளை வென்று தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான ஆர்.சிவா, அடுத்து ‘ஆலன்’ மூலம் முத்திரை பதிக்க விரும்புகிறார்.

இம்மாதம் இந்தியாவின் ‘ரோஹிப்’ அனைத்துலகத் திரைப்பட விழாவில் சிறந்த இந்திய முழு நீளத் திரைப்படப் பிரிவில் ‘கெளரவக் குறிப்பு’ விருது கிடைத்துள்ளது. 
இம்மாதம் இந்தியாவின் ‘ரோஹிப்’ அனைத்துலகத் திரைப்பட விழாவில் சிறந்த இந்திய முழு நீளத் திரைப்படப் பிரிவில் ‘கெளரவக் குறிப்பு’ விருது கிடைத்துள்ளது.  - படம்: ‘ரோஹிப்’ அனைத்துலகத் திரைப்பட விழா
‘ஆலன்’ திரைப்படம்.
‘ஆலன்’ திரைப்படம். - படம்: ஆலன் திரைக்குழுவினர்

கதைக் கரு

எழுத்தாளராகவேண்டும் என்ற இலட்சியம் கொண்ட நாயகருக்கு 15 வயதில் ஓர் எதிர்பாரா நிகழ்வு நடக்கிறது. 15 முதல் 40 வயது வரை அவர் வாழ்வில் சந்திக்கும் துன்பங்கள், தன்னையே தேடி அவர் இந்தியாவின் பல இடங்களுக்கும் ஆன்மீக உலகிற்கும் மேற்கொள்ளும் பயணங்கள் போன்றவற்றைச் சுற்றிக் கதை அமைகிறது.

இறுதியில் அவர் எழுத்தாளர் ஆகிறாரா, அவரது காதல் கைகூடுகிறதா, அவர் ஆன்மீகத்தினுள் நுழைகிறாரா என்பதே கதையின் கரு.

சென்னை, கொடைக்கானல், புதுச்சேரி, காசி, ரிஷிகேஷ், ஃபிராங்க்ஃபர்ட் ஆகிய நகரங்களில் சென்ற ஆண்டு அக்டோபரிலிருந்து மொத்தம் சுமார் 45 நாள்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதற்கான திரைக்கதையை 2022 இறுதியிலிருந்தே சிவா எழுதி வந்தார்.

ஓர் எழுத்தாளரின் வாழ்க்கை எவ்வளவு வலி மிகுந்தது என்பதை என் திரைப்படம் மூலம் உணர்த்த விரும்புகிறேன்.
‘ஆலன்’ திரைப்பட இயக்குநர் ஆர்.சிவா

‘இது என் நெடுநாள் ஆசை’

சிங்கப்பூரில் கட்டுமானத் துறை வணிகத்தை நடத்தும் இயக்குநர் ஆர்.சிவா.
சிங்கப்பூரில் கட்டுமானத் துறை வணிகத்தை நடத்தும் இயக்குநர் ஆர்.சிவா. - படம்: ஆர்.சிவா

சிங்கப்பூரில் கட்டுமானத் துறை வணிகத்தை நடத்தும் சிவாவிற்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்பது நெடுநாள் ஆசை.

எனினும், பொறியியலுக்குள் நுழைந்து குடும்பச் சூழலால் சிங்கப்பூருக்குப் பொருளீட்ட வந்தார் இவர். இவரது திரைப்பட இலட்சியம் கடந்த சில ஆண்டுகளாகத்தான் வெளிச்சம் கண்டுவருகிறது.

சிவா இதற்கு முன்பு இயக்கிய ‘காரோட்டியின் காதலி’ திரைப்படம், தோக்கியோ, இந்தோனீசியா, சிங்கப்பூர், ஹேவ்லாக், நார்வே போன்ற பல அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படம், நடிப்பு, இயக்கம் என பல்வேறு விருதுகளை வென்றது.

‘சிங்கப்பூரில் தமிழுக்குப் பெரும் அங்கீகாரம்’

“சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் போன்ற நிகழ்ச்சிகளால் தமிழ்மொழி பெரிதும் கொண்டாடப்படுகிறது.

“ஆனால் தமிழ்நாட்டில் பல சிறந்த தமிழ் எழுத்தாளர்களும் அங்கீகாரம் பெறுவதில்லை. ஓர் எழுத்தாளரின் வாழ்க்கை எவ்வளவு வலி மிகுந்தது என்பதை என் திரைப்படம் மூலம் உணர்த்த விரும்புகிறேன். நான் இந்தத் திரைப்படத்தை எடுத்தது பணம் சம்பாதிக்க அல்ல; சமூகத்திற்கு என் கருத்தைச் சொல்வதற்காக,” என்றார் சிவா.

‘ஆலன்’ குழு

‘ஆலன்’ திரைப்படம்
‘ஆலன்’ திரைப்படம் - படம்: ஆலன் திரைக்குழுவினர்

‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி 1’, ‘ஜீவி 2’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் பிரபலமடைந்த நடிகர் வெற்றி, இத்திரைப்படத்தின் கதாநாயகர்.

இத்திரைப்படத்தில் இரு கதாநாயகிகள் - மலையாளத் திரைப்படங்களிலேயே பெரும்பாலும் நடிக்கும் அனு சித்தாரா, ஜெர்மனியில் பிறந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான மதுரா - நடித்துள்ளனர்.

ஜெர்மனியிலிருந்து தமிழ்ப் பண்பாட்டையும் மொழியையும் கற்க இந்தியாவிற்கு வரும் மதுராவுக்கும் வெற்றிக்கும் இடையே காதல் பூக்கிறது.

இவர்களுடன் நடிகர்கள் கருணாகரன், ஹரீஷ் பேரடி, விவேக் பிரசன்னா, அருவி மதன் குமார் ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

புதுமுகம் மனோஜ் கிருஷ்ணாவின் இசையமைப்பிலான நான்கு பாடல்களை சங்கர் மகாதேவன், சின்மயி, ஷான் ரோல்டன், நிகிதா காந்தி என பிரபலங்கள் பாடியுள்ளனர்.

Watch on YouTube

ஒளிப்பதிவுக்கு விந்தன் ஸ்டாலின், தொகுப்புக்கு காசிவிசுவநாதன் என பல நிபுணர்களும் குழுவில் இடம்பெறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்