பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“சூரியைத் தவிர இந்தப் படத்தில் நடித்த மற்றவர்கள் யாரும் எனக்குத் தெரிந்த முகங்கள் இல்லை. மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் தெரியவில்லை, பாண்டியன் எனும் கதாபாத்திரம்தான் தெரிந்தது,” என இப்படம் குறித்து கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
“மொத்தத்தில் ‘கொட்டுக்காளி’ குழுவினர் அழகான திரையுலக மொழியில் அற்புதமான பகுத்தறிவுக் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார்கள். அதற்காக இயற்கைக்கு மட்டுமல்ல சிவகார்த்திகேயனுக்கும் நன்றி,” எனக் கமல் இப்படக் குழுவை வாழ்த்தியுள்ளார்.
“சாளரமல்லாத சிறையாக தமிழ் திரையுலகைப் பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய படைப்பாளர்களும் பார்வையாளர்களும் பெருகி விட்டார்கள். ஜெய் திரையுலகம்!,” என்றார் கமல்.
கமலின் அறிக்கையை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு, அவருடைய வாழ்த்துக்கு இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.