திரைத்துறையினருக்கு விருது வழங்கிச் சிறப்பித்த தமிழக அரசு

திரைத்துறையினருக்கு விருது வழங்கிச் சிறப்பித்த தமிழக அரசு

2 mins read
005c0034-5084-4a16-aca8-9bc6d1b57bb4
விருது பெற்ற சூர்யா, தனுஷ், கார்த்தி. - படங்கள்: ஒன் இந்தியா

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அண்மையில் மொத்தமாக அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் சிறந்த நடிகர், நடிகைகளாகத் தேர்வு செய்யப்பட்ட பார்த்திபன், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜோதிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலருக்கும் அவர் விருது வழங்கி கௌரவித்தார்.

2018ஆம் ஆண்டிற்கான சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பெற்றார்.

சிறந்த நடிகர், நடிகையர் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும் இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும் மூன்றாம் பரிசாக ரூ.75,000 வழங்கப்பட்டன.

சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 லட்சமும் வழங்கப்பட்டது.

சின்னதிரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், 2ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.

சின்னதிரை விருதுகளில் சிறந்த கதாநாயகர்களாக பாண்டியராஜன், கௌசிக், தலைவாசல் விஜய், சஞ்சீவ், ஜெய் ஆகாஷ் ஆகியோருக்கும், சிறந்த கதாநாயகிகளாக ராதிகா சரத்குமார், வாணிபோஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

சின்னதிரைக்காக மொத்தம் 433 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விருது தொடர்பான சர்ச்சைகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக ஓய்வுபெற்ற நீதியரசர் கே.பி.கே வாசுகி தலைமையில் தேர்வுக்குழுவினுடைய பரிந்துரைகளின் அடிப்படையில், விருதுகள் அறிவிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்