புதுடெல்லி: உலக அளவில் பல்வேறு பெருநிறுவனங்களை வழிநடத்தும் செல்வாக்குமிக்க இந்திய வம்சாவளியினர் பட்டியலில், ‘கூகல்’ (ஆல்ஃபபெட்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய செல்வாக்குமிக்க இந்திய வம்சாவளித் தலைவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல், நிர்வாகம், கல்வி, தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் இந்தியர்கள் தடம் பதித்துவரும் நிலையில், அனைத்துலகப் பெருநிறுவனங்களைத் தலைமையேற்று நடத்தும் 236 இந்திய வம்சாவளித் தலைவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் நிர்வகிக்கும் 200 நிறுவனங்களின் மொத்தச் சந்தை மதிப்பு 15 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஏறக்குறைய 53 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவருகின்றன. அப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள சுந்தர் பிச்சையின் நிர்வாகத்தின்கீழ், ‘ஆல்ஃபபெட்’ நிறுவனத்தின் மதிப்பு 4.2 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 98 விழுக்காடு வளர்ச்சியாகும்.
பட்டியலில் இரண்டாவது இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா பிடித்துள்ளார். அவரது தலைமையிலான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மதிப்பு 2.6 டிரில்லியன் டாலராக உள்ளது (கடந்த 2024ஐ விட 17 விழுக்காடு குறைவு).
மூன்றாவது இடத்தில் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா உள்ளார். அவரது நிறுவனத்தின் மதிப்பு 1.4 டிரில்லியன் டாலராகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய வம்சாவளி அதிகாரிகள் வழிநடத்தும் 200 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 53 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பமே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
பட்டியலில் உள்ள 200 நிறுவனங்களில் 103 நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்தோ அதனுடன் தொடர்புடைய துறைகளிலோ இயங்கிவருவது கவனிக்கத்தக்கது.
