சசிகுமார், சிம்ரன் நடிப்பில் இம்மாதம் 1ஆம் தேதி வெளியாகி, மூன்று வாரங்கள் கழித்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.
25 வயதான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய அப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.
அப்படம் வெளியான நேரத்தில் தான் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படமும் வெளியானது.
ரெட்ரோவுக்கும் டூரிஸ்ட் ஃபேமிலிக்கும் கடுமையான போட்டி நிலவியது. எனினும், ‘ரெட்ரோ’ படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இச்சூழலில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரை நேரில் சந்தித்து சூர்யா பாராட்டியுள்ளார்.
அச்சந்திப்பு குறித்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டுள்ள அபிஷன் ஜீவிந்த், “அதை எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் இருந்த ஏதோவொன்று இன்று குணமாகிவிட்டது. நான் இயக்கிய இந்தத் திரைப்படம் நடிகர் சூர்யாவை எவ்வாறு கவர்ந்தது என அவர் என்னிடம் விவரிக்கும்போது எமது கண்கள் கலங்கின,” என்றார்.
மேலும், “வாரணம் ஆயிரம்’ படத்தை 100வது முறையாகப் பார்க்கவும் தயங்காத ஒரு சிறுவன் என்னுள் இருக்கிறான். அவன் தற்போது நன்றி உணர்வில் அழுதுகொண்டிருக்கிறான். ரசிகர்களுக்கும் சூர்யாவுக்கும் நன்றி,” என அவர் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி, ராஜமௌலி, சிவகார்த்திகேயன் ஆகியோரும் அப்படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

