ஒரு படத்தில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக கடுமையாக மெனக்கெடக் கூடிய நடிகர்களில் சூர்யாவும் ஒருவர்.
தற்போது ‘ரெட்ரோ’ படத்துக்காகத் தாய்லாந்து சென்று அங்கு தற்காப்புக் கலை கற்று வந்துள்ளார்.
இது சூர்யாவின் 44வது படமாகும். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி, கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எதிர்வரும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று ‘ரெட்ரோ’ படம் வெளியாக உள்ளது.
முன்னதாக, படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
பின்னர், இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் எப்போதும்போல் அல்லாமல் யதார்த்தமாகவும் தனித்துவமாகவும் அமைக்க வேண்டும் என விரும்பினாராம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கேற்ப சண்டைப் பயிற்சியாளரைத் தேடிய போதுதான் ‘கெசா’ குறித்து தெரியவந்திருக்கிறது.
‘ஓன்ங் பாக்’, ‘பாகுபலி 2’ போன்ற படங்களுக்காகப் பணியாற்றியவர் கெசா.
மேலும், ‘விஸ்வரூபம்’, ‘ஜவான்’ போன்ற படங்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த சண்டைக்காட்சிகளை அமைத்தவர் அவர் எனத் தெரியவர, உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்ததாம் படத் தயாரிப்புத் தரப்பு.
இதையடுத்து, தாய்லாந்தில் உள்ள அவரை நேரில் சந்தித்துள்ளார் சூர்யா. அங்கு சில நாள்கள் தங்கியிருந்து சில தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டாராம்.
தினமும் தவறாமல் தீவிர உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சியில் சூர்யா ஈடுபட்டு வருவதும் தற்காப்புக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதில் அவருக்கு இருந்த ஈடுபாடும் கெசாவை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாகத் தகவல். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இந்நிலையில், வித்தியாசமான முறையில் தாய்லாந்தில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் குறித்து ‘ரெட்ரோ’ படக்குழுவின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
“இந்த சண்டைக் காட்சிகள் இதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத ஒன்றாக இருக்கும். எதைச் செய்தாலும் அதை மிகச்சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் சூர்யா, ஒட்டுமொத்த படக்குழுவையும் வியப்பில் ஆழ்த்தினார்.
“சண்டைப் பயிற்சியாளர் கெசாவின் சண்டைக் காட்சிகள் தொடர்பான அணுகுமுறையும் அவரது பொறுமையும் அனைவரையும் கவர்ந்தன.
“காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான தனது எதிர்பார்ப்புகளை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இணையக் காணொளி வசதி மூலம் கெசாவின் குழுவினருக்குப் புரியவைத்தார்.
“சினிமா என்பது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவதுதான். அது இந்தப் படத்தின் மூலம் உறுதியாகி உள்ளது,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா.
அவரது தந்தை நடிகர் சிவக்குமாரும் சகோதரி பிருந்தாவும் உடன் சென்றிருந்தனர். இளையராஜாவுக்கு பூங்கொத்து கொடுத்து சூர்யாவும் அவரது சகோதரியும் வாழ்த்து கூற, சிவக்குமார் ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாக அணிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர் சூர்யா ரசிகர்கள்.