சூர்யாவின் ‘சீன்’: திரையில் காத்திருக்கும் நகைச்சுவை விருந்து

சூர்யாவின் ‘சீன்’: திரையில் காத்திருக்கும் நகைச்சுவை விருந்து

1 of 2
படம்: விகடன்
படம்: விகடன்

24 Oct 2026 - 3:35 pm

2 mins read

‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ என மலையாளத் திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து, இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன், முதன்முறையாக தமிழ் சினிமாவுக்குள் தடம்பதித்துள்ளார்.

சூர்யா கதாநாயகனாக நடிக்க, ஜித்து இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படம் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

“இது நகைச்சுவை, காதல், குற்றச்சம்பவங்கள் நிறைந்த கதைக்களம். நடிகர் சூர்யா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். காவல் அதிகாரியாகப் பணியாற்றி அதிலிருந்து விலகிய ஒருவர், தனக்கு ஏற்படும் நெருக்கடியால் பழைய வழக்கு ஒன்றை மீண்டும் விசாரிக்க நேரிடுகிறது. அவருக்குத் துணையாக முறையான காவல்படை இல்லாத சூழலில், அவர் ஒரு புதிய குழுவை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்.

“அந்தக் குழுவில் இடம்பெறும் நபர்கள் முற்றிலும் மாறுபட்ட சுபாவமும் விசித்திரமான குணாதிசயங்களும் கொண்டவர்களாக அமைகிறார்கள். சாதாரணமான சூழலில் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கே சிரமப்படும் அந்த மனிதர்களை ஒருங்கிணைத்து, நுட்பமான எதிரணியை எதிர்கொண்டு வழக்கின் உண்மையை எவ்வாறு கண்டறிகிறார் என்பதே இப்படத்தின் கதை,” என்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன்.

மர்மமும் நகைச்சுவையும் இணைந்த குற்றப்பின்னணித் திரைப்படமாக உருவெடுத்துள்ள இப்படைப்பில், சூர்யாவின் பாத்திரம் முற்றிலும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

முன்னதாக வெளியான முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் ரசிகர்களால் ஆர்வத்துடன் அலசப்பட்டன.

சூர்யாவின் அர்ப்பணிப்பு குறித்து கேட்டால், புகழ்ந்து தள்ளுகிறார் இயக்குநர். கதையைக் கேட்ட முதல் நிமிடத்திலிருந்தே சிரிக்கத் தொடங்கிவிட்டாராம் சூர்யா.

‘பிதாமகன்’, ‘அயன்’ படங்களுக்குப் பிறகு, இதில் சூர்யாவின் நகைச்சுவை நடிப்பு ரசிகர்களை நிச்சயம் கட்டிப்போடும் என்று மொத்தப் படக்குழுவினரும் பாராட்டுகின்றனர்.

இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார் நஸ்ரியா.

‘ஆவேசம்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நஸ்ரியா, ‘சீன்’ படத்தின் கதையைக் கேட்ட உடனேயே இக்கதாபாத்திரத்துக்குச் சம்மதம் தெரிவித்தாராம்.

“சூர்யா, நஸ்ரியா இருவருக்குமே படத்தில் மிக முக்கியமான, நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. சூர்யாவுக்கு இணையாகப் போட்டிப்போட்டு நடித்துள்ளார் நஸ்ரியா. அவரது முக பாவங்கள் ஒரு காட்சியின் தன்மையை மிக எளிதாக, அழகாக ரசிகர்களிடம் கடத்திவிடும். அருமையான நடிகை,” என்று ஜித்து மாதவன் கூறியுள்ளார்.

சுசின் ஷியாம் இசையமைக்க, வினித் அகஸ்டின் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். அஜ்மல் சாபுவின் படத்தொகுப்பும் திரைக்கதையின் வேகத்துக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசைக்கு மாற்றாகப் பாடல்களே பல இடங்களில் கதையை நகர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

“தமிழ்த் திரையுலகம் நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’, நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’ திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. தமிழ் சினிமாவில் உருவாகிவரும் புதிய தலைமுறை படைப்புகள் ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகிறேன்,” என்று விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஜித்து மாதவன்.

குடும்பத்துடன் மகிழ்ந்து ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் இத்திரைப்படம், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சூர்யாதிரைப்படம்இயக்குநர்நடிகைமலையாளம்