ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ படம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏறத்தாழ ரூ.100 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை முன்னாள் அதிகாரியான சூர்யா, விசித்திரமான மனிதர்களைக் கொண்டு ஒரு குழுவை அமைத்துப் புலனாய்வு செய்யும் பொழுதுபோக்குக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
இதில் சூர்யா பார்வையற்றவராக நடிக்கிறார் என்று பரவிய தகவலை இயக்குநர் ஜித்து மாதவன் மறுத்துள்ளார். சூர்யா பார்வையற்றவராக நடிக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 25ஆம் தேதி துபாயில் உள்ள சிலிகான் சென்ட்ரல் மாலில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
“பழைய வழக்கு ஒன்றை விசாரணை செய்ய முற்படும் காவல்துறை அதிகாரியின் குழுவில் என்ன நடக்கிறது, அவர்களின் உறவுமுறை எப்படிச் செல்கிறது, அது தொடர்பான நகைச்சுவை இதுதான் இந்தப் படம்.
“குடும்பத்தோடு ரசித்து மகிழும் ஒரு பொழுதுபோக்குக் கதையைச் சொல்ல விரும்பினோம். அதை முடிந்தவரை சிறப்பாகத் தர முயற்சி செய்துள்ளோம்,” என்று ஜித்து மாதவன் கூறியுள்ளார்.
