பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சத்தமே இல்லாமல் பலருக்கும் உதவி, நன்கொடையென வாரியிறைக்கும் நடிகர் சூர்யாவிற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர் திரையுலகினர்.
அண்மையில் இயக்குநனர் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு தளத்தில், சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இதனையடுத்து, வாழ்வுடன் உயிரையும் பணயம் வைத்து நடித்துக்கொடுக்கும் இத்தகைய கலைஞர்களுக்கு உதவி வேண்டும் என்ற வேண்டுகோள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியிருந்தது.
இதற்கு மத்தியில் சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா அளித்துள்ள தகவல் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
நடிகர் சூர்யா இந்தச் சண்டைக் கலைஞர்களுக்கு இது போன்ற ஏராளமான நலத்திட்ட உதவிகளைச் செய்து தந்துகொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் திரு சில்வா.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தனது அகரம் அறக்கட்டளை மூலமாக வறிய நிலையில் உள்ள மாணவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இது பலரும் அறிந்த செய்தியாக இருந்த நிலையில், பத்து ஆண்டுகளாகச் சண்டைக் கலைஞர்களுக்கும் சூர்யா செய்து வரும் உதவிகள் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
சமூக வலைத்தளங்களிலும் இது பெரிதாகப் பேசப்பட்டு வரும் வேளையில், திரைத்துறையில் மிகவும் அபாயகரமான பணிகளை மேற்கொண்டு வரும் சண்டைக் கலைஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; படப்பிடிப்பு சமயத்தில் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்துக்குப் போதுமான இழப்பீடு வழங்கப்பட தேவையான செயல்திட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என்ற கருத்துகளும் பரவலாகப் பகிரப்பட்டுவருகின்றன.