‘வைகை’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் மலையாள நடிகை சுவாசிகா. ‘கோரிப்பாளையம்’, ‘சாட்டை’, ‘சோக்காலி’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். இருப்பினும், தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை அவரால் பெற முடியவில்லை. அதனால், மீண்டும் மலையாளத் திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த ‘லப்பர் பந்து’ என்ற படத்தில் சுவாசிகா நடித்தார். இப்படத்தில், ‘அட்டகத்தி’ தினேஷுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தப் படம், வெற்றிப் படமாக அமைந்ததையடுத்து கோடம்பாக்கத்தில் ராசியான நடிகை என்ற பெயரைப் பெற்றார் சுவாசிகா. தற்போது அவரின் கைவசம் பெரிய பொருள் செலவில் தயாரிக்கப்படும் இரண்டு படங்கள் உள்ளன.
இதன்காரணமாக, கேரளாவிலிருந்து மீண்டும் கோடம்பாக்கத்தில் குடியேறியுள்ளார் சுவாசிகா. தமிழ்த் திரையுலகில் மீண்டும் சுவாசிகா கால்பதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் இம்முறை வெற்றி நிச்சயமெனவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.