தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருச்சி லோகநாதனுக்குப் பதில் டிஎம்எஸ்

3 mins read
6c774168-6e48-4a2c-8dbd-174c1241e30b
திருச்சி லோகநாதன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

திரையுலகில் திருச்சி லோகநாதனைப் பின்னுக்குத் தள்ளி, டிஎம்எஸ் என்ற டிஎம் செளந்தரராஜன் முன்னணிக் கதாநாயகர்களுக்குப் பின்னணி பாடகராக உருவெடுத்த கதை சுவாரசியமானது.

1954ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளிவந்த வெற்றிப் படம் தூக்கு தூக்கி. அதில் உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், அ மருதகாசி ஆகியோரின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடுவதாக வரும் பாடல்களுக்கு முதலில் திருச்சி லோகநாதனைத்தான் இசையமைப்பாளர் ஜி ராமநாதன் படக் குழு சார்பாக அணுகினார். அவர் ஒரு பாடலுக்கு 500 ரூபாய் வேண்டும் எனக் கேட்டது அனைவரையும் தூக்கிவாரிப் போட்டது. அவரை எப்படியாவது சமாளிக்க வைப்பதற்காக ஜி ராமநாதன் சமரச முயற்சியாக ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருவதாகப் பேசிப் பார்த்தார்.

திருச்சி லோகநாதனோ சம்மதிக்கவில்லை. பதிலுக்கு, “உங்களுக்கு மலிவாகப் பாட வேண்டும் என்றால் மதுரையில் டிஎம்எஸ் என்ற ஒருவர் இருக்கிறார். அவரிடம் போங்கள்,” என்று கூறிவிட்டார். பின்னாள்களில் மிகப் பிரபலமான பாடகராக உருவெடுத்த டி எம் சௌந்தரராஜன் அப்பொழுது சிறு சிறு நிகழ்ச்சிகளில் அஞ்சுக்கும் பத்துக்குமாகப் பாடி வந்தார்.

பின்னர் டிஎம்எஸ்சைப் படக்குழுவினரிடம் அழைத்து வந்தார் ஜி ராமநாதன். ஆனால், சிவாஜிக்கு முதலில் டிஎம்எஸ் சரியாக வருவார் என்று தோன்றவில்லை. அவரைப் பொறுத்தவரை தனக்கு அதிர்ஷ்டமான பாடகர் என்பது பராசக்தியில் தனக்குப் பாடிய சி எஸ் ஜெயராமன் என்று தோன்றியது. எனவே, அவரையே தூக்கு தூக்கி படப் பாடல்களைப் பாட வைக்கலாம் என்று கூறினார். அந்த நிலையில், டிஎம்எஸ்சும் பாட வேண்டும் என்றால் கூப்பிடுங்கள் என்று சொல்லிக் கிளம்பிவிட்டார்.

இது நடந்தபின் ஜி ராமநாதன், சிவாஜிக்குத் தெரியாமல் டிஎம்எஸ்சை வைத்து மூன்று பாடல்களைப் பதிவு செய்தார். பின்னர் சிவாஜியிடம், “நான் சில பாடல்களை டிஎம்எஸ்சை வைத்துப் பதிவுசெய்துள்ளேன். நீங்கள் அவற்றைக் கேட்டுப் பாருங்கள், பிடிக்கவில்லை என்றால் சி எஸ் ஜெயராமனையே கூப்பிடலாம்,” என்று பாடல்களைப் போட்டுக் காண்பித்தார்.

அதில் தஞ்சை ராமையாதாஸ் வடித்த ‘ஏறாத மலைதனிலே ஜோரான கௌதாரி இரண்டு, தாராளமாய் இங்கே வந்து ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா...’ என்ற பாடலை சிவாஜி மெய்மறந்து கேட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, பாடலுக்கு நடுவில் வரும் ‘தாம் திமித்திமி தந்தக் கோனாரே, தீம் தீமித்திந்தக் கோனாரே, ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே...’ என்ற பாடல் வரிகள் இசையுடன் கலந்து வரும்போது சிவாஜி அவர்களின் கால்கள் மெதுவாக இசைக்கேற்ப தாளம் போட ஆரம்பித்தது.

பாடல்களைக் கேட்ட சிவாஜிக்கு முழு மனநிறைவு. டிஎம்எஸ்சைக் கூப்பிட்டு அவரைப் பெரிய பாடகராக வருவாய் என்று வாழ்த்தி, ‘இனி நீதான் என் பாடல்கள் அனைத்தையும் பாட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அன்று சிவாஜிக்குப் பாட ஆரம்பித்த டி எம் செளந்தரராஜன் பின்னர் எம் ஜி ஆர், எஸ் எஸ் ஆர், ஜெய்சங்கர் என கிட்டத்தட்ட அனைத்து முன்னணிக் கதாநாயகர்களுக்கும் பாடத் தொடங்கினார். அது மட்டுமல்ல, சிவாஜிக்குப் பாடும்போது அடிவயிற்றிலிருந்து எழும்பும் அவரது குரல் எம் ஜி ஆருக்கு பாடும்பொழுது சற்றே மெல்லிய பாணியில் பாடியது. சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷுக்காக அவர் பாடிய ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்ற பாடலும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றது.

இப்படித்தான் தூக்கு தூக்கி படத்தில் அதிகத் தொகை கேட்டு தனது செல்வாக்கை தானே கெடுத்துக்கொண்டார் திருச்சி லோகநாதன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

குறிப்புச் சொற்கள்