கொரியாவில் கோலோச்சிய தமிழ் இளவரசி

கொரியாவில் கோலோச்சிய தமிழ் இளவரசி

1 mins read
cadb916d-6fdf-460e-a842-76f10b31734c
‘மேட் இன் கொரியா’ படத்தில் ஒரு காட்சி. - படம்: டைம்ஸ் நௌ

ஓர் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தமிழில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் நடிகை பிரியங்கா மோகன். அவர் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ படம் விரைவில் வெளிவர உள்ளது.

“இந்தப் படம் நிறைவாக உருவாகி உள்ளது. முதல் முறையாக பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்துள்ளேன்.

“’மேட் இன் கொரியா’ கதையைக் கேட்டதுமே பிடித்துப்போனது. எனக்கு மட்டுமல்ல, யார் இந்தக் கதையைக் கேட்டாலும் பிடித்துப் போயிருக்கும்.

“பலருக்கு உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஒரு தமிழ்ப் பெண், கொரியா போக வேண்டும் என விரும்புகிறாள். அங்கு சென்ற பிறகு அவருக்கு என்ன ஆகிறது என்பதுதான் கதை.

“கொரிய மொழியில் 600 தமிழ் வார்த்தைகள் உள்ளனவாம். இதைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக்.

“பாண்டிய மன்னர்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ள ஓர் இளவரசிதான் செம்பவளம். கன்னியாகுமரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். கன்னியாகுமரியில் இருந்து கொரியா சென்று அங்கே ஓர் இளவரசரைத் திருமணம் செய்துள்ளார். அவரை இன்றுவரை கொரிய மக்கள் தங்கள் ராணியாகக் கருதுகின்றனர்.

“அவருக்கு நினைவிடமும் உள்ளது. செம்பவளத்தின் கல்லறையில் ‘தமிழ் இளவரசி’ எனக் குறிப்பிட்டுள்ளனர்,” என்று வியப்பு குறையாமல் கூறுகிறார் பிரியங்கா மோகன்.

குறிப்புச் சொற்கள்