சிங்கப்பூர்த் தமிழர்களின் பின்னணி, காலனித்துவ ஆட்சிக்காலம், அக்காலத்தில் மக்கள் எதிர்கொண்ட சூழல் எனப் பலவற்றையும் கண்முன் நிறுத்தும் பிரம்மாண்ட தொலைக்காட்சித் தொடரான ‘சண்டமாருதம்’ ஒளிபரப்பாகி வருகிறது.
“பருவக்காற்றுதான் கடல்வழிப் பயணங்களைத் தீர்மானித்தது. வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்றுகள் இல்லையென்றால் நம் வரலாறு முற்றிலும் மாறுபட்டதாகக்கூட இருந்திருக்கும். அதனை மனத்தில் வைத்தே ‘பெருங்காற்று’ எனும் அர்த்தம் கொண்ட சொல்லான ‘சண்டமாருதம்’ என இதற்குப் பெயர் சூட்டினோம்,” என்று தலைப்புக்குப் பின்னாலுள்ள சுவையான கதையுடன் தொடங்கினார் தொடரை எழுதி இயக்கிய முகம்மது அலி.
கடந்த 1930களில் தொடங்கிய கதையை ‘அண்ணாமலை’ எனும் தொடராக எடுத்த இவருக்கு, அதற்கும் முந்தைய காலக் கதையைக் கூற வேண்டுமென்கிற தாகம் துரத்திக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
அதன் விளைவாக, பெருந்தொற்றுக் காலத்தின் முடிவில் சோதனை ஓட்டமாக இரு பாகங்களை சிங்கப்பூரிலேயே படமாக்கிய இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம்முதல் இந்தத் தொடரின் பணிகளில் முழுவீச்சில் இறங்கினார்.
இது சரித்திரப் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை என்றாலும், காலகட்டம், அப்போது வாழ்ந்த குறிப்பிடத் தகுந்தோரின் பெயர்கள், பணிகள், காலனித்துவ ஆட்சியின் கூறுகள் என வரலாற்றுத் தகவல்கள் சரிவர அமைய வேண்டியிருந்தது,” என்ற அவர், அதற்கான அனைத்து ஆவணங்களும் சான்றுகளும் ஒரே இடத்தில் இருக்காது என்பதால் சிரமப்பட்டு அவற்றைச் சேகரித்ததாகக் குறிப்பிட்டார்.
முதன்முதலில் சிங்கப்பூரில் அடியெடுத்து வைத்த தமிழராக அறியப்படும் நாராயண பிள்ளை, யூசப் பின் இஷாக், டான் டோக் செங், சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்கள் தொடர்பான சம்பவங்களும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன.
முக்கியக் கதாபாத்திரங்களை உள்ளூர்க் கலைஞர்கள் ஏற்றுள்ளதுடன், எம் எஸ் பாஸ்கர், மோகன்ராம் உள்ளிட்ட இந்திய நடிகர்கள், மலேசிய நடிகர்கள், இந்தியக் கலைஞர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நம்பிராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
நான்கு மாதங்களில் கதை முழுவதுமாகத் தயாராகிவிட்டாலும், அதனைத் தொடர்ந்த பணிகளில் சந்தித்த சவால்கள் அளவிடமுடியாதவை என்றார் திரு அலி.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்ற நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்தே சவால் தொடங்கியதாகச் சொன்ன அவர், நடிகர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்ற பாத்திரத்துக்கு வலுசேர்க்கும் வண்ணம் உழைப்பைச் சிந்தியதாகக் கூறினார்.
“மிகக் கடுமையான சவால், இடங்கள், பொருள்கள் ஆகியவைதான்,” என்று சொன்ன அவர், “பார்ப்பவர்களை அந்தக் காலகட்டத்துக்கு இட்டுச்செல்லும் முக்கிய அம்சங்கள் இவை என்பதால் அவற்றுக்காக நேரமும், உழைப்பையும் செலவிடுவதில் நாங்கள் தயங்கவில்லை,” என்றார்.
குடிசை வீடுகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்காக இந்தியாவின் சென்னை புறநகர்ப் பகுதிக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தியதாக திரு அலி கூறினார். தோணி, சிப்பாய்களுக்கான துப்பாக்கி என ஒவ்வொன்றுக்கும் மெனக்கெடல் இருந்ததாகக் கூறிய அவர், “ஒரு பழைய கப்பல் தேவைப்பட்டது. அதனைத் தேடி இந்தோனீசியாவரை சென்றோம். ஒரு சில இடங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தினோம்,” என்று சொன்னார்.
வசனங்கள்மீது கூடுதல் கவனம் செலுத்தியதாகவும் நடிகர்களுக்கு இதற்கென தனியே ஒன்றரை மாதகாலப் பயிற்சியளிக்கப்பட்டதாகவும் சொன்னார் திரு அலி.
உடைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததாகவும் அவர் கூறினார்.
“சண்டமாருதம் படத்தின் ஆடை வடிவமைப்பில் பணியாற்றியது சிறப்பான அனுபவம் என்று சொன்ன கவிதா துளசிதாஸ், “அதற்கான ஆய்வுகள், தேடல்கள் ஏராளம்,” என்றார்.
“ஒவ்வோர் உடையும், கதாபாத்திரத்தின் பின்புலம், பண்புகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அந்தக் காலகட்டத்துகான பிரத்யேக உடைகள் என எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், அரும்பொருளகப் புகைப்படங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆடைகளை வடிவமைத்தோம்,” என்றார் அவர்.
சிப்பாய் உடைகளின் செந்நிறத்திலிருந்து தொடங்கி, அவர்கள் அணியும் பித்தளைத் தகடுகள், பதக்கம் வரை வல்லுநர்களைக் கண்டறிந்து அவற்றை வடிவமைத்ததாக அவர் தெரிவித்தார்.
கண்டிப்பான சிப்பாய், அன்பு நிறைந்த உள்ளம் என நுணுக்கமான உணர்வுகள் கொண்ட ‘ராயன்’ கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் புரவலன். “உடை, ஒப்பனை, உணர்வு என அனைத்தும் மாறுபட்டவை. சட்டைப் பொத்தான்கள் தொடங்கி, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தனர். அதனை ஏற்று நடித்தது சிறப்பான அனுபவம்,” என்றார் அவர்.
‘‘நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள கதை என்பதால் சிறு மின்கலப் பெட்டியைக் (Switch Board) கூட திரையில் காட்டிவிடக் கூடாது. அனைவரும் கவனமாகச் செயல்பட்டோம்,’’ என்று புரவலன் கூறினார்.
இத்தொடரில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய இவர், ஆழமான வசனங்களை நடிகர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது, உதவுவது ஆகியவை மூலம் பங்களித்ததில் கூடுதல் மகிழ்ச்சியடைந்ததாகச் சொன்னார்.
“கடல் தாண்டுவது எவ்வளவு கடினமோ, இதனைப் படைத்ததும் அவ்வளவு கடினம். முக்கடல் சங்கமிப்பது போல சிங்கப்பூர், இந்திய, மலேசிய நடிகர்கள் சங்கமித்ததும் சிறந்த அனுபவம்,” என்றார் புரவலன்.
“நம் அடையாளம், சமூகம் தொடர்பான சரித்திரத்தின் அடிப்படையில் அமைந்த கதை சிங்கப்பூர் 60வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் வெளியிடப்பட்டது தனிச்சிறப்புமிக்கது. மக்கள் அனைவரும் கண்டு ரசிப்பார்கள் என நினைக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மகளின் சுதந்திரத் தாகம் தந்தையை எவ்வாறு பாதிக்கிறது என்று சொல்லும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். நகைச்சுவையாகத் தொடங்கி மனத்தை உலுக்கும் விதமாக அது அமைந்துள்ளது. சிங்கப்பூர் தமிழர்களின் வரலாறு குறித்து தெரிந்துகொள்ள ஏதுவாகவும் அனைவரும் ரசிக்கும் படைப்பாகவும் இது அமைந்துள்ளது,” என்றார் நடிகர் எம் எஸ் பாஸ்கர்.
ஒரு நெசவாளியின் அன்பான மனைவியாக, பாசம் மிகுந்த தாயாக, கணவரைக் காப்பாற்றக் கடைசி நொடிவரை போராடும் மனைவியாகத் தம் கதாபாத்திரத்தைச் சிறப்பாக ஏற்று நடித்த கோகிலா, “இது ஒரு மறக்க முடியாத அனுபவம்,” என்றார்.
அண்ணாமலை தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்தாலும், நேரடியாக அலியின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் எனும் கனவு ‘சண்டமாருதம்’ தொடர்மூலம் நனவானதாக அவர் சொன்னார்.
கதையைக் கேட்டபோதே உற்சாகம் பிறந்ததாகக் கூறிய அவர், அக்கால உடைகள் தமக்குப் பொருந்துமா எனும் சந்தேகம் இருந்ததாகவும், பின் இயக்குநர் அலி கொடுத்த ஊக்கம் தம்மை நடிக்க வைத்ததாகவும் சொன்னார்.
“ஒவ்வொருவரும் சிந்திய உழைப்பைப் பார்த்தபோது எனக்கும் உத்வேகம் பிறந்தது. இத்தொடர், சிங்கப்பூரின் திரை, ஊடகத்துறையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது என்று நினைக்கிறேன். இது பெருமைமிக்கது,” என்றார் கோகிலா.
நெசவாளர் குழுவின் தலைவராக, காலனித்துவச் சட்டத்துக்கு எதிராக நெசவுத்தொழில் மேற்கொண்ட குற்றத்துக்காக தண்டனைக் குற்றவாளியாக மலாயா செல்லும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் எம். எஸ் லிங்கம்.
மனத்தை நெகிழவைக்கும் கதை, அழகாகத் திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிய லிங்கம், “இதில் நடித்தது திறமைக்குச் சவாலான சுவையான அனுபவம்,” என்றார்.
இந்தியத் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்களுடன் நடித்தது நல்ல அனுபவம். கூடவே சவாலான அனுபவமும். பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு, பிரத்யேகமான வட்டார வழக்கு ஆகியவை சவாலாக இருந்தன. நூற்றுக்கணக்கானோர் பணியாற்றும் நிலையில் நாம் செய்யும் சிறு தவறு பலரது பணியைப் பாதிக்கும் என்பதால் கூடுதல் கவனம் தேவைப்பட்டது,” என அவர் சொன்னார்.
“சிங்கப்பூரின் திரைத் துறையிலிருந்து இவ்வாறான படைப்புகள் வெளிவருவது பாராட்டத்தக்கது,” என்றும் அவர் சொன்னார்.
“அனைவரது உழைப்பிலும் உருவான தொடரை வெளியிட்டுள்ளோம். சிறப்பாகப் படைத்துள்ளதாகக் கருதுகிறோம். எப்படி இருக்கிறது என்பதைப் பார்வையாளர்கள்தான் சொல்ல வேண்டும்,” என்று சிரிப்புடன் அவர் சொன்னார்.
இத்தொடர் வசந்தம் தொலைக்காட்சியில் திங்கள்முதல் வியாழன்வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.