தனுஷ் நடிப்பில் உருவான, ‘தேரே இஷ்க் மே’ என்ற இந்தித் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ராஞ்சனா, ஷமிதாப், அத்ரங்கி ரே தொடர்ந்து அவர் நடித்திருக்கும் நான்காவது நேரடி இந்தித் திரைப்படம் இது.
தனுஷ் ஏற்கெனவே நடித்த ‘ராஞ்சனா’ படத்தின் சாயலில் வடிவமைக்கப்பட்ட இந்த ‘தேரே இஷ்க் மே’, முந்திய படத்தின் தாக்கத்தைத் தந்திருக்கிறதா?
இந்திய வான்படை அதிகாரியான ஷங்கர் (தனுஷ்), ஒரு சிறந்த விமானியாகத் திகழ்ந்தாலும் தனது பணிகளை மிகவும் அஜாக்கிரதையான முறையில் கையாளுகிறார். இதனால், அவரை மனநல ஆலோசனைக்கு அனுப்ப அவரது மேல் அதிகாரி முடிவு செய்கிறார்.
அங்கு, அவருக்கு மனநல ஆலோசகராக வருகிறார் அவரது கல்லூரிப் பருவக் காதலியான முக்தி (கிருத்தி சனோன்). அவளைக் கண்ட ஷங்கர், ஆத்திரப்படுகிறார். அவர்களது கல்லூரிப் பருவத்தில் என்ன ஆனது, இறுதியில் இவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் தனுஷ்-கிருத்தி சனோன் ஆகிய இருவரது நடிப்புதான். அடிதடியில் ஈடுபடும் சட்டக் கல்லூரி மாணவனாக, தனது காதலுக்காக போராடத் துணியும் ஒரு காதலனாக, வலி, கோபம், அஜாக்கிரதைத்தனம் நிறைந்த ஒரு வான்படை அதிகாரியாக, ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் தனுஷ்.
குறிப்பாக, தனது முன்னாள் காதலியை மறுபடியும் சந்திக்கும் காட்சியிலும், ‘ஃப்ளாஷ்பேக்’கில் ஒரு நிச்சயதார்த்த விழாவில் நாயகியுடன் ஈடுபடும் வாக்குவாதக் காட்சியிலும் தான் எப்பேற்பட்ட நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆனால், கல்லூரிக் காட்சிகளில் அவரது உடல்மொழி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சாயலைப் பெரிதும் நினைவுபடுத்துகிறது.
உளவியல் மாணவியாக, பின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் ஒரு மருத்துவ ஆலோசகராக, தன் மனத்தின் விருப்பம் என்னவென்று தெரியாமல் குழம்பித் தவிக்கும் ஒரு சிக்கல் நிறைந்த கதாப்பாத்திரம் நாயகி கிருத்தி சனோனுக்கு. சோகம், கோபம், குற்ற உணர்வு, அதனால் அவர் திசைமாறிப்போவது என்று பல இடங்களில் முக பாவனைகள் மூலம் அப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியான முறையில் நடித்திருக்கிறார்.
இவர்கள் மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், நாயகியின் தந்தையாக டோட்டா ராய் சௌத்ரி, நாயகனின் நண்பனாக பிரியன்ஷூ, தங்களது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
படத்தின் இன்னொரு பலம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தை பெரிதளவு மெருகேற்றியிருக்கிறது. குறிப்பாக, சங்கர் மகாதேவன் குரலில் வெளியான ‘சின்னவரே’ என்ற தமிழ்ப் பாடல், கேட்க இனிமையாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் துஷார் காந்தி ரே, படத்திற்கு என்ன தேவையோ, அதைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்.
முதற்பாதி, காதல், பாசம், சோகம், பிரிவு எனப் பல உணர்ச்சிகளுடன் நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாம் பாதியோ, அதற்கு முற்றிலும் முரணாகப் பெரிதளவில் ஏமாற்றமளித்தது.
உச்சக்கட்ட காட்சி கண்கலங்க வைக்கும் அளவுக்கு இருந்தாலும், படத்தை முழுதாக ரசிக்கமுடியவில்லை.

