சமூகத்தையும் சினிமாவையும் ஒருபடி முன்னே எடுத்துச் செல்லும் படைப்பு ‘தாய் கிழவி’: ஜோதிகா

சமூகத்தையும் சினிமாவையும் ஒருபடி முன்னே எடுத்துச் செல்லும் படைப்பு ‘தாய் கிழவி’: ஜோதிகா

2 mins read
a051b7d2-599c-4237-b842-90c390a6a20a
நடிகை ராதிகாவுடன் சிவகார்த்திகேயன் தம்பதியர். - படம்: ஐஏம்மூவி

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படம், அறிவித்தபடி இம்மாதம் (பிப்ரவரி) 27ஆம் தேதி வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள அந்தப் படத்தில் தாய் கிழவியாக நடித்துள்ள ராதிகாவின் நடிப்பு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் திரும்பிப் பார்க்கவைக்கும் வகையில் அற்புதமாக உள்ளது என இதுவரை படம் பார்த்த பிரமுகர்கள் அனைவருமே பாராட்டியுள்ளனர்.

‘தாய் கிழவி’ படத்தைப் பாராட்டி நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்மையின் வலிமையை இவ்வளவு அழகாகத் திரையில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் ஜோதிகா.

மேலும் அந்தப் படம் மனத்திற்கு இதமாகவும் புத்துணர்வைத் தருவதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், இது முக்கியமான முற்போக்கான திரைப்படம் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.

வயதுத் தடையைத் தாண்டி, ஒரு பெண்ணின் தூய்மையான திறமையை மையமாக வைத்துப் படம் எடுத்ததற்காக ஒட்டுமொத்த நடிகையர் சமூகத்தின் சார்பாகவும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சமூகத்திற்கு இவ்வளவு முக்கியமான கருத்தைக் கூறியுள்ள இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு இது முதல் படம் என்பதை நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“குறிப்பாக நகைச்சுவையுடன் கருத்து சொல்லியிருப்பது சிறப்பு. ஒரு பெண்ணாக உங்கள் கதையைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உணர்ந்தேன். உங்கள் சிந்தனையோட்டம் உங்கள் நற்பண்பைப் பிரதிபலிக்கிறது,” என்று இயக்குநரையும், “ராதிகா மேடம் போன்ற ஒரு மகா கலைஞருக்கு, அவர் தகுதிக்கேற்ற ஒரு மேடையை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி,” என்று தயாரிப்பாளரையும் மெச்சியுள்ளார் ஜோதிகா.

ராதிகாவின் உடல்மொழி, அவரது ‘ஸ்டைல்’, வெகுளித்தனம், குரல் மாற்றம், சிரிப்பு, வசன உச்சரிப்பு என அனைத்திலும் அவர் ரசிகர்களின் இதயத்தை வெல்லும் வகையில் உள்ளது என்றும் ‘தாய் கிழவி’ என்பது பெண்ணை மையமாகக் கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்ல, இது சமூகத்தையும் சினிமாவையும் ஒருபடி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு என்றும் ஜோதிகா தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தனது குழுவுடன் ஒரு கனவை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

திரையுலகம் தனக்குக் கொடுத்த புகழுக்கு ஈடாக ஏதேனும் திருப்பித்தர வேண்டும் என்ற எண்ணம்தான் ‘தாய் கிழவி’ போன்ற படங்களைத் தயாரிக்கத் தூண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

“நான் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் அழிக்கவோ வரவில்லை. எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பையும் வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக என்னை விட்டுவிடுங்கள்.

“இதுபோன்ற திறமையுள்ள கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும்போது நிறையக் கற்றுக்கொள்கிறேன். என்னுடைய படங்களின் வெற்றி, தோல்வி இரண்டுக்குமே நான்தான் பொறுப்பு,” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இயக்குநருக்கும் பாராட்டுகள் குவிந்ததை அடுத்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவா.

குறிப்புச் சொற்கள்