திரைக்கலைஞர்களுக்கு இன்று மவுசு இல்லை: தேஜு அஸ்வினி

3 mins read
744bf242-12e1-431c-923d-8a2104179c9f
தேஜு அஸ்வினி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

ஜிவி பிரகாஷுடன் ‘பிளாக்மெயில்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் தேஜு அஸ்வினி. ஏற்கெனவே தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘என்ன சொல்லப் போகிறாய்’ ஆகிய படத்தில் நடித்தவர்.

திரையுலகில் நுழைய வேண்டும் என்கிற எண்ணம் தமக்கு அறவே இல்லை என்றும் தன் சொந்த நடன ‘ஸ்டூடியோ’வைப் பெரிதாக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வந்ததாக அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் தேஜு.

“எனது பொழுதுபோக்கு, ஆர்வம் எல்லாமே நடனம்தான். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் வேலை பார்த்துக்கொண்டே ‘மாடலிங்’ துறையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலக வேலை என்றால், அதன் பிறகு இரவு வரை ‘மாடலிங்’ பணி என்று நாள்கள் பறந்தன.

“மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்த இடத்தில் பலவிதமான சிக்கல்கள். தினமும் ஊழியர் சந்திப்பு, அலைச்சல் என்று சிரமப்பட்டாலும் மாடலிங் துறையில் நிலையான இடம் கிடைக்கும் வரை பொறுமை காத்தேன். ஒரு கட்டத்தில் ‘மாடலிங்’ செய்வதன் மூலம், ஒரே நாளில் ரூ.20,000 வரை சம்பாதிக்க முடிந்தது,” என்கிறார் தேஜு.

இதனால் விற்பனைத் துறை வேலையை உதறிவிட்டு, ‘மாடலிங்’கில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

அப்போதுதான், ஒரு தோழி மூலமாக சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளது.

நடனம் தெரியும், நடிக்கத் தெரியாதே என்று இவர் விழிக்க, ‘முயற்சி செய்து பார்’ என்று அதே தோழிதான் ஊக்கம் கொடுத்துள்ளார்.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சிறிய வேடம்தான் அமைந்தது என்றாலும், அடுத்த படத்திலேயே நாயகியாக உயர்ந்துவிட்டார்.

இதையடுத்து, ‘மூன்றாம் கண்’, ‘பிளாக்மெயில்’ என அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமான தேஜு அஸ்வினி, தற்போது ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இவரது தந்தை சத்யநாராயணன் இசைக் கலைஞர். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணியாற்றியவர்.

“அப்பாவுக்கு வருமானம் குறைவுதான். பெற்றோரை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், நல்ல வேலையில் சேர்ந்து நன்கு சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது.

“சினிமாவின் இன்றுள்ள வாய்ப்பு நாளை இருக்குமா என்பது தெரியாது. அதனால்தான் எனக்கு அதில் ஆர்வம் இல்லாமல் போனது. அதற்குப் பதில் மனிதவளத் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்து வேலை தேடினேன். ஆனால், காலம் எனக்கு வேறு கணக்கைப் போட்டிருப்பது இப்போதுதான் தெரிகிறது.

“இன்றைய தேதியில் திரையுலகப் பிரமுகர்களைவிட, ‘யூடியூபர்’கள்தான் மதிப்புடன் வலம் வருகிறார்கள். அவர்களுக்கான மவுசு யாருக்கும் இல்லை.

“உண்மையாகவே, சில திறமைசாலிகள் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. அவர்கள் நல்ல காணொளிகளை வெளியிடுகிறார்கள். ஆனால், வெறும் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்குபவர்களும் வெற்றி பெறுவதும் பிரபலமாவதும்தான் எப்படி சாத்தியமாகிறது எனத் தெரியவில்லை,” என்று புலம்பாத குறையாகப் பேசும் தேஜு அஸ்வினியின் தாய்மொழி தெலுங்கு.

கடந்த 2024ஆம் ஆண்டு இவரது நடிப்பில் உருவான தெலுங்குப் படம் விரைவில் திரைகாண உள்ளதாம். தாய்மொழியில் அறிமுகமாவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.

‘மூன்றாம் கண்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

“இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகிறது ‘பிளாக்மெயில்’. அவர் இதுவரை திகில் படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இதுவும் அப்படிப்பட்ட படம்தான்.

“வெறுமனே மரங்களைச் சுற்றி வந்து காதல் பாடல்கள் பாடுவதாக மட்டுமல்லாமல், நன்கு நடிப்பதற்கும் வாய்ப்புள்ள நாயகி வேடம் அமைந்துள்ளது. மருந்துக்கடையில் பணியாற்றும் ஊழியராக நடித்துள்ளேன். இதற்கு மேல் படம் குறித்து எனக்குப் பேச அனுமதியில்லை.

“எனினும், பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்று தோற்றம் அளிக்கும் எங்கள் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நிச்சயம் நன்கு பதியும்,” என்று எதிர்பார்ப்புகளுடன் சொல்கிறார் தேஜு அஸ்வினி.

குறிப்புச் சொற்கள்