வடஇந்திய நடிகைகள் வெள்ளையாக இருப்பதால் மட்டுமே அவர்களுக்குத் தென்னிந்திய திரையுலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது எனத் தாம் நினைப்பதாகக் கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.
தென்னிந்தியப் படங்களில் நடிக்க உள்ளூர் நடிகைகளையே தேர்வு செய்வர் என்றும் அவர்கள் மிகுந்த அழகும் திறமையும் கொண்டவர்கள் என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்தவர் நடிகை ராதிகா ஆப்தே.
அவர், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச் செல்வன்’, ரஜினிகாந்துடன் ‘கபாலி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘சித்திரம் பேசுதடி-2’ படத்துக்குப் பிறகு தென்னிந்திய திரைப்படங்களில் பெரிதாக நடிக்கவில்லை.
இந்நிலையில், தென்னிந்திய மொழிகளில் நடிகைகளைத் தேர்வு செய்யும் நடைமுறை குறித்து ராதிகா ஆப்தே தெரிவித்துள்ள கருத்து, விவாதங்களை எழுப்பியுள்ளது.
“நான் அவ்வளவு வெள்ளையாக இல்லை. அதனால்தான் தென்னிந்திய மொழிகளில் எனக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.
“தென்னிந்திய நடிகைகள் திறமைசாலிகள். மொழியையும் நன்றாக அறிந்தவர்கள். அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
“மொழி தெரியாத நடிகைகளை நடிக்க வைத்து, பிறரைக் கொண்டு பின்னணிக் குரல் கொடுக்க வைக்கும் நடைமுறையை நான் ஊக்குவிப்பதில்லை. வசனங்களைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், சூழலுக்கு ஏற்ப இயல்பாக நடிக்க மொழி அறிவு மிகவும் அவசியம்,” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.
தற்போது தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்கா’ என்ற இணையத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் (ஓடிடி தளத்தில்) வெளியாகியுள்ளது.
