அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிப்பில் வெளியான ‘கான் சிட்டி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ், “திரைப்பயணத்தில் முதல் முறையாக ஒரு சிறுவனுக்கு அப்பாவாக இதில் நடித்திருந்தேன்.
“படப்பிடிப்பின் முதல் நாளிலேயே என்னை அந்தச் சிறுவன் ‘அப்பா’ என்று அழைத்தபோது ஒரு புதிய நெகிழ்ச்சியான உணர்வு ஏற்பட்டது.
“இப்படத்தில் அந்த வேடம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, தற்போது பலரும் என்னை அப்பா பாத்திரத்தில் நடிப்பதற்காகவே அதிகமாக அணுகி வருகிறார்கள்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“திரைப்படம் வெளியான பிறகு பல்வேறு திரையரங்குகளுக்கும் நேரில் சென்று பார்த்தோம்.
“குடும்பத்தினர், குழந்தைகள், இளையர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் படத்தைக் கொண்டாடிய விதம் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது. இக்கதையை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷுக்கு என் நன்றி.
“கதை சொல்லும்போதே ஒரு மாபெரும் நடிகர் பட்டாளம் இதில் இருக்கும் என்று கூறினார். அது அப்படியே உண்மையாகி இருந்தது. இவ்வளவு திறமைமிக்க மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதும் அவர்களுடன் என் பெயரும் ஒரே சுவரொட்டியில் இடம்பெற்றதும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்,” என்றார் அர்ஜுன் தாஸ்.

