நான் நடித்த படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டனர்: தனுஷ் கோபம்

2 mins read
97e587d3-1f52-469e-8017-bbbeb516d1b7
‘ராஞ்சனா’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

தாம் நடித்த இந்திப் படம் மறு வெளியீடு செய்யப்பட்டதால் மகிழ்ச்சி அடைவார் என்று பார்த்தால், அதற்கு நேர்மாறாக கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கிறார் தனுஷ்.

கடந்த 2013ஆம் ஆண்டு, இவரது நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘ராஞ்சனா’. கதைப்படி, படத்தின் இறுதிக்காட்சியில், நாயகன் தனுஷ் இறந்துவிடுவார். இந்தப் படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இப்படத்தின் மறு வெளியீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

சொன்னபடி படமும் வெளியானது. ஆனால், படம் பார்த்த தனுஷ் ரசிகர்களுக்கோ கடும் அதிர்ச்சி.

2013 பதிப்பில் தனுஷ் இறப்பதுபோல் அமைக்கப்பட்ட ‘கிளைமேக்ஸ்’ காட்சியை, அண்மைய பதிப்பில் தனுஷ் உயிரோடு திரும்பி வருவதுபோல் மாற்றிவிட்டனர்.

இது குறித்து அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்குகூட விவரம் தெரியாதாம். இந்தப் படம் தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற தலைப்பில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், “படத்தின் இறுதிக்காட்சியை மாற்றி, எனது படைப்பை அவமதித்துவிட்டனர். நான் கடும் மன உளைச்சலில் உள்ளேன்,” என்று கூறியுள்ளார் இயக்குநர் ஆனந்த் எல்.ராய்.

இதேபோல் தனுஷும் தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

“ஏஐ உதவியுடன் உருவான இறுதிக்காட்சியுடன் ‘ராஞ்சனா’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டிருப்பது என் மனதை முற்றிலுமாக பாதித்துள்ளது.

“இந்த மாற்றத்தால் படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டனர். சம்பந்தப்பட்ட தரப்பினர் எனது எதிர்ப்பை மீறி இவ்வாறு செய்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட படம் இதுவல்ல.

“திரைப்படங்களையோ அல்லது அதன் கதையையோ மாற்ற ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, கலை மற்றும் கலைஞர்கள் ஆகிய இரு தரப்புக்கும் மிகவும் கவலையளிக்கும் முன்னுதாரணம்.

“சினிமாவின் மரபை இது அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

குறிப்புச் சொற்கள்