தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக மொழிகளில் ‘திருக்குறள்’ ஆவணப்படம்

2 mins read
ef62955b-b9aa-44cd-a0c8-5c90302b4ee5
முனைவர் இர. பிரபாகரன். - படம்: இ.ஜே.சுந்தர்
multi-img1 of 4

திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்தால் மட்டும் போதாது.

உலகப் பொதுநூலாம் திருக்குறளை உலக மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டுமாயின் இன்றைய சூழலில் அது காட்சிப்படுத்த வேண்டியதும் கட்டாயமாகும்.

இத்தேவையை உணர்ந்து திருக்குறளைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டுமென்று நீண்ட நாள்களாகக் கனவு கண்டவர் அமெரிக்கத் தமிழ் மூதறிஞர் முனைவர் இர. பிரபாகரன்.

இவர் கணினி, கணித, மேலாண்மை வல்லுநர் என்ற முறையில் அமெரிக்க விண்வெளித் துறையிலும் நாசாவிலும் அமெரிக்க ராணுவத்திலும் உயர் பதவிகள் வகித்தவர். சங்க இலக்கியங்கள் பலவற்றிற்கும் உரையெழுதியவர். திருக்குறள் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் எழுதி சொற்பொழிவுகள் ஆற்றி வருபவர்.

அவர் கனவு நனவாகும் வண்ணம், தற்போது ஆங்கிலத்தில் ‘The Ageless Wisdom of the Indian Poet Philosopher Thiruvalluvar’ என்ற பெயரில், tamilchair.org மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘திருக்குறள்’ படமாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு முனைவர் இர. பிரபாகரன் அவர்களே வர்ணனை எழுதியுள்ளார்.

தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குநர் அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். ‘ஒருத்தி’, ‘மனுஷங்கடா’ ஆகிய இவரது படங்கள் அனைத்துலகத் திரைப்பட விழாவில் இடம்பெற்ற சிறப்புக்குரியவை.

‘பாரதி’, ‘சர்.சிவி.ராமன்’ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ள இவர், இப்படத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி இயக்கிவருகிறார்.

உலகத் தமிழ்க்களஞ்சியத்தின் முதன்மைத் தொகுப்பாசிரியர், பேராசிரியர் முனைவர் இ.ஜே.சுந்தர் இப்படத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கத்திற்குக் காரணமானவர்களுள் ஒருவரும் சிறந்த புரவலரும் தமிழ் ஆர்வலருமான இதய மருத்துவர் ஜானகிராமன் இப்படத்திற்குத் தம் பேராதரவை நல்கி வருகிறார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) இப்படத்திற்குத் தம் பங்களிப்பை வழங்கி ஜூலை மாதம் 3, 5ஆம் தேதிகளில் வடக்கு கரோலினாவிலுள்ள ராலே நகரில் நடைபெறும் பேரவையின் மாநாட்டில் இப்படத்தை வெளியிட உள்ளது.

அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் பார்க்கும் வண்ணம் 30 நிமிடங்களே அமையும் இப்படம், முதலில் ஆங்கிலத்தில் வெளிவந்தாலும் தொடர்ந்து ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், சீனம், ஜப்பானியம், இந்தி முதலிய முக்கிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, உலக மக்களிடையே திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது.

இதற்காக நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களில் இப்படத்தைப் பன்னாட்டு மக்களும் பார்க்கும் வண்ணம் திரையிடவும் ஏற்பாடாகி வருகிறது.

திருக்குறள் வரிகளை அழகுறக் காட்சிப்படுத்தும் வண்ணம் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, மயிலை, திருச்சி, செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

திருக்குறள் பரப்பும் பணியில் ஒரு பாய்ச்சலாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்