‘திருக்குறள்’ பற்றிய ஆவணப்படம் ஒன்று ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் உருவாகி உள்ளது.
திருக்குறள் பற்றி பல நூல்களை எழுதியுள்ள டாக்டர் ஆர்.பிரபாகரன் இதன் ஆங்கில வடிவத்தை நவம்பர் 16ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியாவில் திரையிட உள்ளார்.
திருக்குறளின் மேன்மையைப் பிற நாட்டவர்களுடன் இன்றைய இளம் தலைமுறை தமிழர்களும் அறிந்துகொள்ளும் வகையில் படம் உருவாகியுள்ளது. வள்ளுவர் பேணிய மனித சமத்துவம் படத்தின் கருப்பொருளாகும்.
எல்லிஸ் அச்சடித்த வள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம், வீரமாமுனிவர் லத்தீனில் திருக்குறளை மொழிபெயர்த்த கையெழுத்துப் படிகள், குறள்கள் பொறிக்கப்பட்ட பழமையான ஓலைச் சுவடிகள், உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலைகள், கிராஃபிக்ஸ் போர் காட்சிகள், குறும்பட வடிவில் காமத்துப்பால் காட்சிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.
ராகுல், ராஜீவ் ஆனந்த், ஹன்சிகா, சுபா ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் தோன்றுகிறார்கள். இப்படத்தின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் இ.ஜே.சுந்தர் பணியாற்றியுள்ளார். Tamil chair Inc என்ற அறக்கட்டளையின் ஆதரவில் வெளிவரும் இப்படத்திற்கு டாக்டர் ஜானகிராமன் உறுதுணையாக உள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார் படத்தை இயக்கியுள்ளார். வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் விழாவினை நடத்துகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்படத்தயாரிப்பைப் பாராட்டி விழாவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

