சரியான நேரத்தில் கிடைத்துள்ள ஊக்கம்: நிவேதா தாமஸ்

3 mins read
3acd532a-73fc-4cb5-b103-02b10cca8a48
நிவேதா தாமஸ். - படம்: ஊடகம்
multi-img1 of 2

தெலுங்கானா என்ற தனிமாநிலம் உருவான பின்னர் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருதுப் பட்டியலில் ‘சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருது’ பெறும் நடிகை எனத் தன் பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டதும் மகிழ்ச்சியில் பூரித்துப்போனாராம் நிவேதா தாமஸ். ரஜினி, கமல்ஹாசன் எனத் தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடித்தவர்.

‘35 சின்ன கத காது’ படத்திற்காக உடல் எடையை அதிகரித்து, இரு குழந்தைகளுக்குத் தாயாக, இல்லத்தரசியாக நடித்து அசத்தி இருந்தார் நிவேதா.

அதேசமயம் சமூக ஊடகங்களில் பலர் இவரைக் கேலி, கிண்டலுக்கு ஆளாக்கி மகிழ்ந்தனர். ஆனால், எந்தப் படத்திற்காக எதிர் விமர்சனங்களை எதிர்கொண்டாரோ, அதே படத்திற்காக ‘சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருது’ பெற்று, எல்லாரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் நிவேதா.

அதேசமயம், இவரது ரசிகர்களில் பெரும்பாலானோர் இப்போது முன்வைக்கும் ஒரே கேள்வி, ‘எப்படி இவ்வளவு இள வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்க ஒப்புக்கொண்டீர்கள்?’ என்பதுதானாம்.

“எட்டு வயது முதல் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வயதில் இதுதான் என்னுடைய நிரந்தர வேலையாக, தொழிலாக மாறும் என்பது தெரியாது. மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் ஆவதுதான் நம் லட்சியம் என்று சிறு வயதில் நினைப்போம்.

“ஆனால், பள்ளிக்கூடம் போய் படித்து முடித்துத் திரும்பியதும், மாலையில் படப்பிடிப்புக்குப் போகும் வாழ்க்கை எனக்கு அமைந்தது. அதனால், சினிமாத்துறையில் வேலை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் அந்தச் சிறு வயதிலேயே என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது,” என்கிறார் நிவேதா.

தெலுங்கானா அரசின் விருதும் அங்கீகாரமும் தன் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் கிடைத்துள்ள மிகப்பெரிய ஊக்கமாகக் கருதுவதாகச் சொல்பவர், இதற்காக இயக்குநர் நந்த கிஷோருக்கு நன்றி தெரிவிப்பது தன் கடமை என்று விகடன் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகம் நிவேதாவின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என சில விமர்சகர்கள் கூறியிருப்பது குறித்துக் கேட்டால், மென்சிரிப்புதான் நிவேதாவின் முதல் பதிலாக வந்துவிழுகிறது.

“உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முடிந்த அளவு என்னால் இயன்ற நியாயத்தைச் செய்கிறேன்.

“பக்கத்து வீட்டுப் பெண், தெருவில் யாசகம் கேட்டு அலையும் பெண் என எத்தகைய வேடமாக இருந்தாலும் என் திறமையை முழுமையாக வெளிப்படுத்துகிறேன். பாராட்டுகள், விமர்சனங்கள் என இரண்டையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.

“முன்பைவிட இப்போது பெண்களுக்காகவே நிறைய கதைகள் எழுதப்படுகின்றன. பிரச்சினை என்னவென்றால், அந்தக் கதாபாத்திரங்களைத் திரையில் கொண்டுவர தேவைப்படும் பணமும் அதற்கான நம்பிக்கையும்தான் மிகப்பெரிய சவால்களாக உருவெடுத்துள்ளன.

“எனவே, திரையுலகமும் கலைஞர்களும் தயாராக இருந்தாலும் இந்தச் சவால்கள் முட்டுக்கட்டைகளாக உள்ள,” என்கிறார் நிவேதா.

இளம்பெண்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை?

“அமைதியாக இருங்கள். இந்தச் சமூகத்தில் வருகிறவர்களும் போகிறவர்களும் ஆயிரம் கருத்துகளைச் சொல்வார்கள். சிலசமயம், நம்மால் அவற்றைத் தட்டிக்கழித்துவிட முடியாது. ஆனால், அனைத்தையும் கடந்து வந்துவிட வேண்டும்.

“கடைசியில் நம்முடைய மன நிம்மதி, மகிழ்ச்சிதான் முக்கியம். நமக்கான எல்லைகளை வகுத்துக்கொள்வது முரட்டுத்தனம் அல்ல. மிக அவசியமான விஷயம்.

“எந்த வேலையைச் செய்தாலும் முழு மனதோடு செய்யுங்கள். அப்படிச் செய்தால், இந்தப் பிரபஞ்சமே மற்ற அனைத்தையும் பார்த்துக்கொள்ளும்,” என்கிறார் நிவேதா தாமஸ்.

குறிப்புச் சொற்கள்