நடிகை ஸ்ரீதேவி உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு அவர் கடைப்பிடித்த உணவுக்கட்டுப்பாடுதான் காரணம் என்றும் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாதான் அவரை இதற்காக கட்டாயப்படுத்தினார் என்றும் மற்றொரு இந்தி இயக்குநரான பங்கஜ் பரஷர் தெரிவித்துள்ளார்.
ராம் கோபால் வர்மாவின் அதீத கெடுபிடி காரணமாக, ஸ்ரீதேவி படப்பிடிப்புத் தளத்திலேயே மயங்கி விழுந்த சம்பவத்தையும் பங்கஜ் தமது அண்மைய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீதேவி இரட்டை வேடங்களில் நடித்த ‘சால்பாஸ்’ படத்தை இயக்கியது பங்கஜ்தான். இப்படத்தில் ரஜினியும் அக்ஷய் குமாரும் நாயகர்களாக நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் ஸ்ரீதேவி மீதான ராம் கோபால் வர்மாவின் கெடுபிடிகள் அதிகமானதாக குறிப்பிட்டுள்ளார் பங்கஜ்.
“ஸ்ரீதேவி படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நல்லவிதமாகத்தான் உடல்நிலையைப் பேணிக்காத்து வந்தார். ஆனால், ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கும்போது பிரச்சினை தொடங்கியது.
“தன் படத்தில் நடிக்க வேண்டுமானால், ஸ்ரீதேவி தன் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என வற்புறுத்தினார் ராம் கோபால் வர்மா. அவரது தொல்லை தாங்காமல் ஸ்ரீதேவி தீவிர உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். இதனால் அவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
“இந்திப் படமான ‘மேரி பீவி கா ஜவாப் நஹி’ படப்பிடிப்பின்போது, உடலில் உப்பின் அளவு குறைந்ததால் ஸ்ரீதேவிக்கு ரத்த அழுத்தம் குறைந்து, படப்பிடிப்புத் தளத்திலேயே மயங்கி விழுந்தார். மொத்தப் படக்குழுவும் அதிர்ச்சி அடைந்தது.
“மயங்கி விழுந்தபோது அருகில் இருந்த மேசையில் மோதியதால் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒரு பல்லும் உடைந்தது. இதனால் சில காலம் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து ஓய்வெடுத்தார் ஸ்ரீதேவி.
தொடர்புடைய செய்திகள்
“என் படத்தின் இறுதிக்காட்சியையும் படமாக்க முடியவில்லை. அதனால் அதுவரை எடுத்த காட்சிகளை வைத்து படத்தை முடித்தேன். படத்தின் முடிவை திரையில் காட்டும்போது, சில வார்த்தைகளைக் காண்பித்து, ரசிகர்களுக்குப் புரிய வைத்தேன்,” என்று இயக்குநர் பங்கஜ் பரஷர் மேலும் கூறியுள்ளார்.

