தமிழ் சினிமா உலகுக்கு இந்த ஆண்டு வசூல் ரீதியில் வெற்றிகரமாக அமையுமா என்பது தெரியவில்லை. ஆனால், கடந்த மூன்று மாதங்களில் நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வெளியான நான்கு தமிழ்ப் படங்களுடன் சேர்த்து, நடப்பாண்டில் இதுவரை 67 படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இவற்றுள் தயாரிப்புத் தரப்புக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் லாபம் கொடுத்த படங்கள் என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணிவிடலாம்.
‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘வித் லவ்’, ‘தாய் கிழவி’, ‘யூத்’ ஆகிய நான்கு படங்கள் மட்டுமே வசூல் ரீதியில் சாதித்துள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான ‘பராசக்தி’ படம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டதாகக் கூறப்பட்டாலும், தயாரிப்புத் தரப்புக்கு லாபகரமாக அமையவில்லையாம்.
வெற்றி பெற்ற நான்கு படங்களின் மொத்த வசூல் ரூ.285 கோடி. மற்ற படங்களையும் சேர்த்தால் ரூ.300 கோடிக்கும் சற்று அதிகமாக இருக்கும்.
மற்றபடி, ஒரு படம் நூறு கோடி ரூபாய் வசூல்கண்டு அனைத்துத் தரப்பினருக்கும் லாபகரமாக அமைந்தது என்று சொல்லும் வகையில், இன்னும் ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பதே உண்மை நிலவரம் என்று கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

