தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என் திட்டங்களைக் கவிழ்த்த கொரோனா: மோனிஷா பிளெஸ்ஸி

3 mins read
a68c2bd6-28b8-4444-9338-c1e5d68b413c
மோனிஷா பிளெஸ்ஸி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்துள்ளார் மோனிஷா பிளெஸ்ஸி.

அதையடுத்து, ரஜினியுடன் ‘கூலி’, விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ என நல்ல வாய்ப்புகளைப் பெற்று மோனிஷாவுக்கு, ஊடகத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள்.

மின்னணு ஊடகத் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். படிக்கும்போதே குறும்படங்கள், இணையத் தொடர்கள், யூடியூப் காணொளிகள் என அனைத்திலும் பங்கேற்பது தனது வழக்கமாகக் கொண்டிருந்தாகக் கூறும் மோனிஷா, வாய்ப்புகள் சிறியதா, பெரியதா என்றெல்லாம் பார்க்க மாட்டாராம்.

“சிறு வயதில் படிப்பு, கலை நிகழ்ச்சிகள் என இரண்டிலும் ஒரே மாதிரியாக ஆர்வம் காட்டுவேன். பின்னாளில் ஊடகத் துறையைத் தேர்வு செய்ய இந்த ஆர்வம்தான் காரணமாக அமைந்தது.

“தொலைக்காட்சிப் போட்டிகள், சின்னத்திரை நேர்முகத் தேர்வுகளில் தவறாமல் கலந்துகொள்வேன். ஒரு போட்டியில் வென்றதன் மூலம், பிரபல தொலைக்காட்சி ஒளிவழியில் ஒரு நாள் மட்டும் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

“நல்ல அனுபவம் என்றாலும், அச்சமயம் பொதுத்தேர்வு என்பதால் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது என முடிவு செய்தேன். மீண்டும் ஊடகத் துறையில் கவனம் செலுத்தலாம் என நினைத்தபோது, கொரோனா முடக்கநிலை என் திட்டங்களை மொத்தமாகக் கவிழ்த்துவிட்டது.

“நான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தடைபட்டன. இத்தனைக்கும் கொரோனா பாதிப்புக்கு முன்பே ஒரு திரைப்படத்தில்கூட நடித்து முடித்திருந்தேன்,” என்று கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் மோனிஷா.

ஆனால், விதி இவருக்குச் சாதகமாகவே இருந்துள்ளது. திடீரென ‘மாவீரன்’ படத்துக்கான நடிப்புத் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்புத் தேடி வந்ததாம்.

சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்க தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை தாம் அறவே எதிர்பார்த்திருக்கவில்லை என்கிறார்.

“மாவீரன்’ படத்தில் பணியாற்றிய எழுத்தாளர்தான் ‘கூலி’ படத்திலும் வேலை செய்தனர். அதன் மூலமாகத்தான் ‘கூலி’ பட வாய்ப்புக் கிடைத்தது. நடிப்புத் தேர்வுக்காக என் புகைப்படங்களைக் கேட்டபோது, பெரிதாக நம்பிக்கை ஏதும் இல்லாமல்தான் கொடுத்தேன். ஆனால், சரியாகப் படப்பிடிப்பு தொடங்கியபோது, இரு நாள்களுக்கு முன்பு அழைப்பு வந்தது.

“தலைவர் ரஜினியின் படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டினாலும்கூட அதுவே பெரிய சாதனைதான். எனினும், ‘கூலி’யில் நடித்தது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. காரணம், எத்தனை காட்சியில் நாம் வரப்போகிறோம் என்பது தெரியாதல்லவா?

“ஒருவேளை படத்தொகுப்பின்போது நான் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டால் என்ன செய்வது எனத் தயங்கினேன். ஆனால், இன்று ஊடகப் பேட்டி அளிக்கும் அளவுக்கு ரசிகர்களால் என்னை அடையாளம் காண முடிகிறது,” என்கிறார் மோனிஷா.

ரஜினியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் இயக்குநர் லோகேஷ் அதை நிறைவேற்றி வைத்ததாகவும் சொல்லும் மோனிஷா, படப்பிடிப்பின்போது ரஜினியிடம் காணப்படும் சுறுசுறுப்பு அனைவரையும் தொற்றிக்கொள்ளும் என்கிறார்.

“கூலி’ படம் என் வாழ்வில் மறக்க முடியாத ஓர் அனுபவம். ரஜினியிடம் பேசவும் எனக்கு வாய்ப்பு அமைந்தது. சண்டைக் காட்சியில் அவருடன் இணைந்து நடிப்பேன் என்பதைக் கனவிலும்கூட நினைத்ததில்லை.

“அவரது புன்சிரிப்பு அனைத்தையும் மறக்கடித்துவிடும். ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென என்னைப் பார்த்து ‘காட் பிளெஸ் யூ’மா என்று ஆசிர்வதித்தார். அதில் இருந்த உண்மை என்னைச் சிலிரிக்க வைத்தது,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் மோனிஷா.

குறிப்புச் சொற்கள்