‘ஆர்ஆர்ஆர்’ படத்தைவிட ‘வாரணாசி’ பிரம்மாண்ட படைப்பு: ராஜமௌலி

‘ஆர்ஆர்ஆர்’ படத்தைவிட ‘வாரணாசி’ பிரம்மாண்ட படைப்பு: ராஜமௌலி

படம்: பிளாக் ஹேட் டேலன்ட்

24 Oct 2026 - 3:31 pm

2 mins read

தாம் இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைவிட ‘வாரணாசி’ படம் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் என இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற பிரம்மாண்ட காவியப் படங்களின்மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் நிமிரச்செய்த பிரபல தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி, தனது அடுத்த படைப்பு குறித்த முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரேசில் நாட்டில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அவர், கடந்த 2022ல் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனை படைத்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைவிட, ‘வாரணாசி’ படம் ஐந்து முதல் ஆறு மடங்கு பிரம்மாண்டமாக உருவாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் உலகப் பேரழிவைத் தடுக்கப் போராடும் கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இந்தியாவின் புனித நகரமான வாரணாசி, அன்டார்டிகா, ஆப்பிரிக்கா போன்ற பல்வேறு உலகப் பின்னணிகளில் இக்கதை நகர்கிறது. மேலும், பண்டைக்கால இந்திய வரலாற்றின் கூறுகளையும் ஆராயும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்தில் தெலுங்கு நட்சத்திர நடிகர் மகேஷ் பாபு, பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா, மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு ராஜமௌலியுடன் இணைந்து அவரது தந்தையும் பிரபல திரைக்கதை ஆசிரியருமான வி.விஜயேந்திர பிரசாத், எஸ்.எஸ்.காஞ்சி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.

“இதற்கு முன்பு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து, இப்படத்திற்கான திட்டமிடலை மிகத் துல்லியமாக வகுத்தோம். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை 315 நாள்களில் படமாக்கினோம்.

“ஆனால் ‘வாரணாசி’ அதைவிடப் பெரிய படம் என்றாலும் முறையான திட்டமிடல் காரணமாக 275 நாள்களிலேயே படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது,” என்று தெரிவித்துள்ளார் ராஜமௌலி.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்இயக்குநர்வாரணாசிபிரேசில்