நடிகர் தர்மேந்திரா நலமாக உள்ளார்: குடும்பத்தினர் விளக்கம்

2 mins read
ded8c4ba-69e1-4c8b-be60-57a6eda63089
தமது மனைவி ஹேமமாலினியுடன் தர்மேந்திரா. - கோப்புப் படம்: ஊடகம்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானதாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) காலை இந்தியா முழுவதும் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தார்.

இந்த நிலையில், தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது மனைவியும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி தமது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்தப் பதிவில், “என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், பொறுப்புமிக்க செய்தி ஊடகங்கள் எவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பமுடியும். இது மிகவும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோலும் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை நலமுடன் உள்ளார். குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் பல முன்னணி ஊடகங்கள் தர்மேந்திரா காலமாகிவிட்டதாக செய்தி வெளியிட்டன. தமிழ் ஊடகங்களும் அதே செய்தியை தங்களது இணையத்தளத்தில் பதிவேற்றின.

அதனைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற பிரபலங்கள் தங்களது சமூக ஊடகப் பக்கத்தில் தர்மேந்திராவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டனர். தர்மேந்திரா மரணச் செய்தி வதந்தி என அறிந்ததும் அவர்கள் அந்தப் பதிவை நீக்கிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்