ஹைதராபாத்: தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகையும் தயாரிப்பாளருமான கிருஷ்ணவேணி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) காலமானார்.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் மரணமடைந்த இவருக்கு வயது 101.
1924ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணவேணி, சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்தார். பிரபல இயக்குநர் புல்லையா, குழந்தைகளை முக்கிய கதாபாத்திரங்களில் கொண்ட ‘அனசுயா’ என்ற திரைப்படத்தை இயக்க முடிவுசெய்தார்.
அப்போது ‘துலாபாரம்’ நாடகத்தைப் பார்த்த ஒருவர், அதில் நடித்த கிருஷ்ணவேணியை ‘அனசுயா’ படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத் தேர்வு செய்தார். அப்போது கிருஷ்ணவேணிக்கு 10 வயது.
அவருடன் 60 குழந்தை நட்சத்திரங்கள் நடித்த அப்படம் முழுவதும் கோல்கத்தாவில் உருவானது. 1937ல் சிஎஸ்ஆர் ஆஞ்சநேயலு, கிருஷ்ணவேணியைச் சென்னைக்கு அழைத்து வந்தார். அதன்பின் பல வெற்றிப் படங்களில் நடித்தார் கிருஷ்ணவேணி. சொந்தக்குரலில் பாடும் திறமையும் கொண்டவர் இவர்.