சிறந்த நடிகை விருதுக்காகக் காத்திருக்கும் ராஷ்மிகா

3 mins read
9d263174-7980-4248-8aad-3e48095a9008
ராஷ்மிகா மந்தனா. - படம்: ஊடகம்

டிசம்பர் மாதம் எப்போதுமே தமக்கு சிறப்பு வாய்ந்தது என்கிறார் ராஷ்மிகா மந்தனா.

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் இவருக்கு, எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், ஒரு படத்தில் நடிக்க ராஷ்மிகா பத்து கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகவல் வெறும் வதந்தி என்று அவர் கூறினாலும், யாரும் நம்புவதாக இல்லை.

ஏனெனில் ‘புஷ்பா’ படத்துக்காக ராஷ்மிகா பெற்ற சம்பளம் இரண்டு கோடி ரூபாய்தான். அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க பத்து கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷ்மிகாவிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு, “ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய் வாங்கும் நடிகை மாதிரியா நான் உங்களுக்குத் தெரிகிறேன். என் சம்பளம் குறித்து வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.

“‘புஷ்பா’ படத்தில் நான் நடிப்பதற்கு முதல் காரணம் அதன் கதைதான். இயக்குநர் சுகுமார் மிகச் சிறப்பாக இயக்கினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

“இந்தப் படத்தின் மூலம்தான் அல்லு அர்ஜுன் தேசிய விருது பெற்று தெலுங்கு திரையுலகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். இரண்டாம் பாகத்தின் மூலம் எனக்கும் பெருமை கிடைக்குமா என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார் ராஷ்மிகா.

இதற்கிடையே, டிசம்பர் மாதம்தான் இவருக்கு மிகவும் ராசியான மாதமாம்.

‘புஷ்பா’ முதல் பாகம் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் வெளியானது. அதேபோல் இவர் நடித்த ‘அனிமல்’ இந்தி திரைப்படமும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியீடு கண்டது.

இதற்கிடையே, ‘புஷ்பா 2’ படத்தின் முன்னோட்டக்காட்சித் தொகுப்புக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பு, படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஐதராபாத், சென்னை, கொச்சி, பாட்னா எனப் பல்வேறு இடங்களில் பட வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு கவர்ச்சியான உடையணிந்து வந்து அசத்தினார் ராஷ்மிகா. மேலும் ராஷ்மிகாவும் அல்லு அர்ஜுனும் ரசிகர்களுடன் சுவாரசியமாக உரையாடினர்.

இதன்மூலம் படத்தைக் கடைக்கோடி ரசிகர்கள் வரை கொண்டு செல்வது எளிதாக இருக்கும் எனப் பட விநியோகிப்பாளர்கள் இருவரையும் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் ‘புஷ்பா 2’ படத்தின் வெளியீட்டு உரிமை பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. தற்போது வெளிநாடுகளில் கிடைக்கும் வசூல் இதுவரை எந்த இந்திய திரைப்படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு இருக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இப்படத்துக்கு நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘புஷ்பா 2’ படத்தின் தயாரிப்பு செலவு ரூ.500 கோடி என்றும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்பதுதான் படக்குழுவின் இலக்கு என்றும் கூறப்படுகிறது.

டிசம்பர் 5ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் இதுவரை 50,000 திரையரங்கு நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளனவாம். இதன் மூலம் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் கிடைத்துள்ளதாம்.

மேலும், சிறப்புக் காட்சிக்கான வசூல் மட்டுமே ஏறக்குறைய ரூ.12 கோடி என்கிறார்கள். அமெரிக்காவில் மட்டுமே முதல்நாள் வசூல் ரூ.40 கோடியைக் கடந்துவிடும் எனக் கூறப்படும் நிலையில், ‘புஷ்பா’ படம் வசூல் வேட்டைக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், ராஷ்மிகாவுக்கு இந்தியில் மேலும் சில பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்துள்ளனவாம். எனவேதான் அவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்க அதிக சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது.

ரன்வீர் கபூருடன் அவர் மீண்டும் ஒரு படத்திலும் இணைந்து நடிப்பார் எனத் தெரிய வந்துள்ளது. மூத்த நடிகர்களுடன் இணைவதைத் தவிர்த்து இளம் நாயகர்களுடன் ஜோடி சேர்வதில்தான் ராஷ்மிகா கவனமாக உள்ளாராம்.

மேலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அவரது திருமணம் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாக தாம் ஒப்புக்கொண்டுள்ள அனைத்து படங்களிலும் அவர் நடித்து முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராஷ்மிகா திருமணம் குறித்து யோசிக்க மாட்டார் என்றும் அவர் அடுத்து நடிக்கவுள்ள இந்திப் படங்களின் வெற்றி, தோல்விகளைப் பொறுத்தே தனது வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வை முடிவு செய்வார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்