“நானும் என் மனைவி ஐஸ்வர்யா ராயும் நல்ல நண்பர்கள். இன்றுவரை அப்படித்தான் இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார் அபிஷேக் பச்சன்.
இந்த உறவு மிக இயல்பாக அமைந்தது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றிவிட்டதாகவும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ந்து ஊடகங்கள் கொளுத்திப்போட்டு வருகின்றன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், காதலித்த காலம், நிச்சயதார்த்தம், திருமணம் என அனைத்திலும் இருவரும் நல்ல பங்காளிகளாக இருந்ததாகப் பேட்டியில் கூறியுள்ளார் அபிஷேக் பச்சன்.
“`நான் சாப்பாடு கொண்டு வருகிறேன், நீ வீட்டைப் பார்த்துக்கொள்’ என்பது போன்ற எந்த விவாதமும் எங்களுக்குள் இருந்ததில்லை. இருவரில் யார் அதிகம் வெற்றி பெற்றவர் என்பது குறித்து நாங்கள் யோசித்ததே கிடையாது.
“என் பெற்றோரின் திருமணம் நடந்தபோது, என் தந்தையைவிட என் தாயார்தான் மிகப் பெரிய நட்சத்திரமாகத் திகழ்ந்தார். இது ஒன்றும் இயல்புக்கு மாறான விஷயம் அல்ல.
“எங்கள் வீட்டில் அப்படி இல்லை. யார் வெற்றி பெற்றவர் எனும் எண்ணம் அல்லது அளவுகோல், ‘தான்’ எனும் ‘ஈகோ’வால் வருவதாக நினைக்கிறேன்.
“எனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே எனக்கு ஐஸ்வர்யாவைத் தெரியும். நான் பல படங்களில் இணைந்து நடித்த ஒரே நடிகை ஐஸ்வர்யா மட்டுமே.
தொடர்புடைய செய்திகள்
“எனது இரண்டாவது படமான ‘தாய் அக்ஷர் பிரேம் கே’ (2000) படத்திலேயே அவருடன் இணைந்து நடித்ததுதான். அப்போது நாங்கள் காதலர்களாக அல்லாமல் வெறும் நண்பர்களாகவே இருந்தோம்,” என்று மனம் திறந்துள்ளார் அபிஷேக் பச்சன்.
ஒரு பந்தயத்தில் வெற்றி பெற, மற்றவர்கள் பின்வாங்க வேண்டும் என்று நினைப்பது சரியல்ல என்றும் தமக்கு அத்தகைய எண்ணம் இருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை அமிதாப் பச்சன் தன்னை அறிமுகப்படுத்தவோ அல்லது தனக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கவோ முயற்சி செய்யவில்லை என்றும், எனினும் பின்னாள்களில் தான் நடித்த படங்களில் ஒன்றான ‘பா’ திரைப்படத்தைத் தயாரித்தார் என்றும் அபிஷேக் நினைவுகூர்ந்துள்ளார்.
“நானும் ஐஸ்வர்யாவும் எங்கள் மகள் ஆராத்யா பச்சனை எப்படி வளர்த்து வருகிறோம் என்று எல்லாருமே கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெற்றோரில், தந்தையர்கள்தான் மோசமான ஆசிரியர்கள் என நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார் அபிஷேக்.
ஐஸ்வர்யாவும் அபிஷேக் பச்சனும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

