சமந்தா என்றாலே எதையும் தாங்கும் இரும்புப் பெண் என்று சொல்லும் அளவுக்கு அனைத்துச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
உலகம் முழுவதும் வெளியாகும் ‘சிட்டாடல்’ இணையத்தொடரில் நடித்து வரும் இவருக்கு, பெரும்தொகை ஊதியமாகப் பேசப்பட்டுள்ளதாம். இத்தனைக்கும் அதிரடி, அடிதடிக் காட்சிகள் நிறைந்த இந்தத் தொடரில் சமந்தா கதாநாயகி அல்ல.
“நடித்தால் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை நம்பி இப்படியான கதைகள் தேடி வருவது ஒரு வகையில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது. இதற்கான பாராட்டுகள் அனைத்தும் இயக்குநர்களைத்தான் போய்ச்சேர வேண்டும். ஒரு நடிகையாக என்னை செதுக்கி ஆளாக்கியது அவர்கள்தான்.
“வாழ்க்கை என்பது எப்போதுமே ஒரே மாதிரியாக இருந்துவிடாது. சில நாள்கள் சிறப்பாக இருக்கும். சில நாள்கள் நாம் எதிர்பார்த்ததுபோல் அமையாமல் போகும். எனினும், ஒவ்வொரு நாளும் நாம் போராடித்தான் வாழ வேண்டும்.’
“எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, ‘சமந்தா சீக்கிரம் இறந்துவிடுவார்’ என்ற செய்தியைக்கூட நான் கடந்துவர வேண்டியிருந்தது. எனினும் உண்மையை மீறி எந்த பொய்யும் நீண்ட நாள் நீடிக்காது அல்லவா.
“எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு போராட்டம் நிச்சயம் இருக்கும். அதைக் கடந்துவர பெரிதாக மெனக்கெட வேண்டியிருக்கும். எனக்கும் அப்படிப்பட்ட சில போராட்டங்கள் உள்ளன. அவ்வளவுதான்,” என்று வாழ்க்கையைப் பற்றிய புரிதலை யதார்த்தமாகவும் எளிமையாகவும் சில வார்த்தைகளில் விவரிக்கிறார் சமந்தா.
நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியானதாக அமையும் என உறுதியாகச் சொல்ல இயலாது என்று குறிப்பிடுபவர், ஒருவேளை முடிவுகள் தவறாக அமைந்தால் அதை நினைத்து முடங்கிவிடக்கூடாது என்கிறார்.
“எத்தனை நாள்களுக்குத்தான் நான் செய்த தவறை நினைத்து புலம்பிக் கொண்டிருக்க முடியும். நடிப்போ, வாழ்க்கையோ எல்லா இடங்களிலும் எனது நூறு விழுக்காடு பங்களிப்பை அளித்து வருகிறேன். இதில் எந்தவிதக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். எனினும் சில நேரங்களில் இந்த அணுகுமுறை சரியாக அமைகிறது. மற்ற சமயங்களில் எதிர்மறை முடிவுகளைத்தான் தருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“நம்மைச் சுற்றியுள்ள நெருங்கிய நண்பர்கள், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்லவர்களைப் பற்றி நினைக்கும்போது தொடர்ந்து ஓட வேண்டும் என்றும் உழைக்க வேண்டும் என்றும் தோன்றும். நான் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்,” எனத் தத்துவார்த்தமாகப் பேசுகிறார் சமந்தா.
இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் தம்மை நேசிக்க, அன்பு செலுத்த சிலர் இருப்பதால்தான் தம்மால் தொடர்ந்து வாழ்க்கை இலக்குகளை நோக்கி ஓட முடிவதாகக் குறிப்பிடும் அவர், அண்மைக் காலமாக கதைத் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதாகச் சொல்கிறார்.
ஒரு கதையைக் கேட்டு முடித்தபின் குறைந்தபட்சம் ஒரு நாள் முழுவதும் நன்கு யோசித்து தமக்கு ஒத்துவரும் என்று தெரிந்த பிறகே அதில் நடிக்க ஒப்புக்கொள்கிறாராம் சமந்தா.
“நான் நடிக்கும் ‘சிட்டாடல்’ தொடர் ரகசிய உளவாளிகள் தொடர்பானது. இப்படிப்பட்ட கதைகளில் ஆண்கள் மட்டுமே நடித்துப் புகழ்பெற்று வந்தனர். இப்போது நிலைமை மாறி வருகிறது. அதற்கான அடையாளமாகவே ‘சிட்டாடல்’ போன்ற தொடர்களைப் பார்க்கிறேன்.
“இதுபோன்ற தொடர்களில் நான் நடிப்பேன் என்றோ, அதிரடி வசனங்களைப் பேசி சண்டை போடுவேன் என்றோ நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. என்னுடைய திரைப்பயணத்தில் இதை ஆகச்சிறந்த மாற்றமாகக் கருதுகிறேன்.
“இதுபோன்ற தொடர்களில் நடிக்கும்போது நம்மிடம் உள்ள திறமையின் ஆகச்சிறந்த பகுதியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும், அந்த வகையில், நான் ஏற்கெனவே நடித்த ‘ஃபேமிலி மேன்’ இணையத் தொடருக்குப் பிறகு அதன் இயக்குநர்கள் ராஜ், டி.கே. ஆகியோருடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் சமந்தா.

