மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அதில் நாம் மகிழ்ச்சி காணவேண்டும்: அனுமோல்

3 mins read
0380c57b-d855-4c3e-a7f2-4cd658bd0135
அனுமோல். - படம்: ஊடகம்
multi-img1 of 2

கேரளாவில் பிறந்த நடிகை அனுமோல், சிறு வயதில் இருந்தே தனக்கு தமிழகத்துடன் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்.

இவரது தந்தை தொழிலதிபர். தொழில் விஷயமாக மாதம் இருமுறையாவது ஊட்டிக்கு வந்துபோவாராம். அப்போதெல்லாம் அனுமோலும் அடம்பிடித்து எப்படியாவது ஊட்டிக்கு வந்துவிடுவார்.

“அப்படித்தான் தமிழ் மக்களின் அன்பையும் அக்கறையும் கவனித்து, அவர்களுடன் நெருக்கமாகிவிட்டேன்.

“தமிழ்ப் பண்பாடு, கோவில் திருவிழாவை சிறு வயதிலேயே மிகவும் ரசித்தேன். கொலுசு, மூக்குத்தி போடும் ஆசையெல்லாம் தமிழ்ப் பெண்களைப் பார்த்துத்தான் வந்தது.

“வீட்டில் ஏராளமான மூக்குத்திகளையும் கொலுசுகளையும் சேர்த்து வைத்துள்ளேன். படிப்பு முடிந்ததும், ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பிறகு தொலைக்காட்சியில் செய்திப் பிரிவு, நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று தொடக்கத்தில் பல வாய்ப்புகள் அமைந்தன. 2009ஆம் ஆண்டுதான் திரையுலகில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது,” என்கிறார் அனுமோல்.

தமிழில் எனது முதல் படம் ‘கண்ணுக்குள்ளே’. இதில் நடித்த பிறகுதான், மலையாளத்தில் முன்னணி நடிகையாக உருவெடுத்ததாகச் சொல்கிறார்.

தமிழ், மலையாளம், வங்காளம், குஜராத்தி, சமசுகிருதம் எனப் பல மொழிகளில் 54 திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடித்துள்ளார் அனுமோல். எனினும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடர் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்ப நடிகையாகப் பெயரெடுத்துள்ளார்.

“தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடிக்க இப்படியொரு படைப்பு தேவைப்பட்டிருக்கிறது.

“மலையாளத்தில் நான் நடித்த பல படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால், தமிழில்தான் குறிப்பிடத்தக்க வெற்றி என்று எதுவும் அமையவில்லை.

“அயலி இணையத் தொடர் மூலம் எல்லாரும் என்னைத் திரும்பிப் பார்த்தனர். ஆனால், ‘ஹார்ட் பீட்’ தொடர்தான் அதற்கும் அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டு சென்றது.

“தமிழ் மக்களின் அன்புக்கு நான் என்றும் அடிமை,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் அனுமோல்.

இவருக்கு ரசிகைகளின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகமாம். ஆறு முதல் அறுபது வரை என அனைத்துப் பிரிவினரும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். தீவிர ரசிகர்களுக்காக ஒரு ‘வாட்ஸ்அப்’ குழுவைத் தொடங்கி, அவ்வப்போது அவர்களுடன் உரையாடி மகிழ்கிறார்.

“என் பிறந்தநாளன்று ஓர் இளம் ரசிகை நூறு பேருக்கு உணவு வாங்கித் தந்த தகவலைக் குழுவில் பகிர்ந்தார். அதைப் பார்த்த மற்றொரு பெண், தினமும் பத்து பேருக்கு உணவளிக்கிறார்.

“இன்று இத்தனை பேருக்கு உணவளித்தேன்,” என்று தினமும் பத்துப் பேராவது குழுவில் தகவல் பகிர்கிறார்கள்.

“மனிதர்களாகப் பிறந்தால் மட்டும் போதாது. மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அதில் நாம் மகிழ்ச்சி காணவேண்டும்.

“என்னால் ஒருசிலரையாவது இவ்வாறு ஊக்கப்படுத்த முடிவதில் மனநிறைவு ஏற்படுகிறது.

“சிறு வயதிலேயே என் தந்தையை இழந்துவிட்டேன். அம்மா, மூன்று தங்கைகள் ஆகியோரைக் கவனிக்கும் பொறுப்புள்ள பெண்ணாக இயல்பாகவே மாறிப்போனேன்.

“அம்மாவுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்வதற்குக்கூட பிறரது உதவி தேவை. அப்படிப்பட்ட குடும்பத் தலைவியாகவே இருந்துவிட்டார். ஆனால் என்னை ஊக்கப்படுத்தி துணிச்சலான பெண்ணாக வளர்த்தார்.

“எங்கள் வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்துவது, வங்கி வேலைகள் என எல்லாவற்றையும் நான்தான் கவனிப்பேன்,” எனச் சொல்லும் அனுமோலுக்கு, தமிழில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

ஆனால், படங்களைத் தேர்வு செய்வதில் நிதானமாகச் செயல்படுவதாகச் சொல்கிறார்.

குறிப்புச் சொற்கள்