பெங்களூரு: கன்னட மொழி குறித்த தமது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிடில் அவரது ‘தக் லைஃப்’ படத்தைக் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில திரைப்பட வணிக சபை தெரிவித்துள்ளது.
கமல் வெள்ளிக்கிழமைக்குள் (மே 30) மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.
கமலின் கருத்து குறித்து திரைத்துறைப் பங்காளிகளுடன் திரைப்பட வணிக சபை ஆலோசகனை நடத்தியது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சபையின் தலைவர் எம். நரசிம்மலு, “கமலின் ‘தக் லைஃப்’ படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பல கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதனையடுத்து, நாங்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினோம். கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவுசெய்துள்ளோம். அவர் செய்தது தவறு என ஒப்புக்கொள்கிறோம். அவரைச் சந்தித்துப் பேச முயன்று வருகிறோம்,” என்றார்.
கொந்தளித்த கோவிந்து
இதனிடையே, “கமலுக்காக நாங்கள் கருணை காட்டப்போவதில்லை. நாளைக்குள் (மே 30) அவர் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், கன்னட அமைப்புகளுக்கு ஆதரவளித்து, தீவிரமாகப் போராடுவோம். அவர் மன்னிப்பு கேட்காவிடில் அவரது படத்தை ஒருகாலும் வெளியாக விடமாட்டோம்,” என்று சபையின் முன்னாள் தலைவர் ச.ர. கோவிந்து காட்டமாகக் கூறினார்.
கடந்த 2008 முதல் 2010 வரை அச்சபையின் தலைவராகச் செயல்பட்ட நடிகை ஜெயமாலா, “மொழி குறித்து சர்ச்சை ஏற்பட்டால் கன்னடர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அது எங்கள் கடமை. கமல்ஹாசன் தெரிந்தோ தெரியாமலோ பேசியிருந்தாலும் அவரது கூற்று தவறானது. கன்னடம் தமிழிலிருந்து பிறக்கவில்லை,” என்று கூறினார்.
மேலும், ஒரு பிழை நேர்ந்துவிட்டால் அதனை நியாயப்படுத்தாமல் மன்னிப்பு கேட்பதில் ஒன்றும் தவறில்லை என்றும் அவர் சொன்னார்.
மணிரத்னம் இயக்கத்தில் தாம் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல், “தமிழிலிருந்தே கன்னட மொழி பிறந்தது,” எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்குக் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, கன்னடத்தின் மீதுள்ள அன்பினால்தான் அவ்வாறு சொன்னேன் என்றும் அந்த அன்பு ஒருபோதும் மன்னிக்காது என்றும் கமல் விளக்கமளித்திருந்தார்.
இந்தச் சூழலில், கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்துக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தக்ஸ் என்றால் மூர்க்கர்கள், போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்திரிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்தப் பெயர் கமலஹாசனால் பெருமிதப்படுத்தப்பட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்திய வரலாற்றை ஆழமாக படித்தவர்கள் 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் Thugs & Pindaris சென்ற மூர்க்கப் போக்கிரிக் கூட்டம் எந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை அறிவர் என்றும் அக்கூட்டம் இந்தியாவெங்கும் பரவிய வழிப்பறி கொள்ளைக் கூட்டம் என்றும் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

