அண்மைக் காலமாக திரையுலகை உடல் நேர்மறை (Body Positivity) முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒவ்வொருவரும் தங்கள் உடல்வாகு, ஒட்டுமொத்த உருவம் எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நேசிப்பதும் மதிப்பதும்தான் உடல் நேர்மறை என்கிறது ஒரு தரப்பு.
இத்தகைய மனநிலை என்பது சமூகத்தின் முக்கியமான அம்சம் என்றும் அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். உருவக்கேலி என்பது இந்தியத் திரையுலகுக்குப் புதிதல்ல.
ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் சிலர், சில நடிகைகளை அல்லது நடிகர்களை உருவக்கேலி செய்வதும் அது சர்ச்சையாவதும் வாடிக்கையாக நடந்து வருவதுதான். அவ்வாறு பாதிக்கப்பட்டு மனம் நொந்துபோன சில நாயகிகளின் அனுபவங்களைப் பார்ப்போம்.
தமன்னா
நடிகை தமன்னாவின் கொள்ளை அழகும் வாளிப்பான உடல்வாகும் ரசிகர்களைக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை. அப்படிப்பட்ட அழகியான அவரிடமே ‘ஓடெல்லா-2’ படத்தில் நடிக்கக் கேட்டபோது, உங்கள் கவர்ச்சியான உடல் அமைப்பும் பால் போன்ற நிறமும் பக்தி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்குமா என்று கேட்டனராம்.
ஏற்கெனவே உருவக்கேலிக்கு ஆளாவதால் கோபத்தில் இருந்த தமன்னாவை இந்தக் கேள்வி மேலும் உசுப்பிவிட்டது.
“ஒரு பெண்ணின் இயற்கையான அழகும் கவர்ச்சியும் இந்தச் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டும். மாறாக, இவ்வாறு வீண் கேள்விகளை எழுப்பக் கூடாது,” என்று பதிலடி கொடுத்தார்.
வித்யா பாலன்
தமிழில் ‘உருமி’, ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை வித்யா பாலன், சற்று உடல் பருமனாக இருக்கிறார். இளம் வயதில் இருந்தே அவர் இப்படித்தானாம். இதனால் பல அசௌகரியங்களையும் உருவக்கேலிகளையும் சந்தித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பல படங்களுக்கான கதையைச் சொல்லும்போதே, ‘கதாநாயகன் இளையர் என்பதால் உடல் எடையைக் குறைக்க வேண்டும், உங்களால் முடியுமா’ என்று மறக்காமல் கேட்பார்களாம்.
பல ஆண்டுகளாக இந்தக் கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக் கேட்டு சலித்துப்போய்விட்டது என்று குறிப்பிடும் வித்யா பாலன், இந்த ஒரே கேள்வியைத் தவிர்ப்பதற்காக வெறி பிடித்ததுபோல் உடற்பயிற்சிகளை மேற்கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
பல ஆண்டுகள் தனக்குப் பிடித்தமான பல உணவு வகைகளைத் தொடவே இல்லையாம். உணவுக் கட்டுப்பாடும் நீடித்ததால் உடலில் வலி, வீக்கம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ‘ஹார்மோன்’ பிரச்சினையாகவும் மாறிவிட்டது.
“ஒரு கட்டத்தில் எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருந்தது. அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தேன். என் திறமைக்கு மட்டுமல்ல, உடல் வாகுக்கும் ஏற்ற கதாபாத்திரமாக இருந்தால் மட்டும் ஒப்பந்தம் செய்யுங்கள். இல்லையேல், என்னை மறந்துவிடுங்கள் என்று கூறத் தொடங்கினேன்.
“அதன் பிறகே எனக்குள் இருந்த கோபம், பயம், ஒருவித வெறுமை எல்லாம் காணாமல் போயின,” என்று அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார் வித்யா பாலன்.
அன்று அவர் எடுத்த முடிவைத்தான் இன்று ‘உடல் நேர்மறை’ என்று குறிப்பிடுகிறார்கள்.
நடிகை அனுஷ்கா, நித்யா மேனன், ராணி முகர்ஜி எனப் பலரும் உடல் நேர்மறையில் கவனம் செலுத்துகிறார்கள்.
அனுஷ்கா
‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகரித்தார் அனுஷ்கா. ஆனால், மீண்டும் அவரால் இளைக்க முடியவில்லை. பலவிதமான உடற்பயிற்சியை மேற்கொண்டும் பலனில்லை.
‘பாகுபலி’ ராணா அளித்த சில ஆலோசனைகளும் கைகொடுக்கவில்லை என ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார் அனுஷ்கா.
தற்போது மீண்டும் ஓரிரு படங்களில் நடித்து வரும் அவரையும் உருவக்கேலி செய்பவர்கள் விடவில்லை.
“தொடக்கத்தில் என்னைப் பற்றி ‘டிரோல்’ செய்தவர்களுக்குப் பதிலடி கொடுப்பதில் தீவிரமாக இருந்தேன். பின்னர் யாரையும் கண்டுகொள்வதே இல்லை,” என்கிறார் அனுஷ்கா.
இதுவும் ஒரு வகையில் உடல் நேர்மறை வகையறாக்களில் ஒன்றுதான் என்கிறார்கள்.
நித்யா மேனன்
தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நித்யா மேனன், குண்டாக இருப்பது நீண்ட காலமாக பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர் எதையும் கண்டுகொள்வதாக இல்லை.
தன்னுடைய உடல் வாகும் எடையும் எந்த விதத்திலும் தன்னைச் சிரமப்படுத்தவில்லை எனும்போது, மற்றவர்களுக்கு ஏன் அது சிரமமாகத் தெரிகிறது என்று கேள்வி எழுப்புகிறார் நித்யா.
‘தாய் கிளவி’ பாடலுக்காக இணையவெளியில் ஏராளமானோர் இவரைக் கிண்டல் செய்தபோதும் அசரவில்லை. காரணம், இந்தப் பாடல்தான் தம்மைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது என்றும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்ததற்குத்தான் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைத் தாம் பெற்றதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நித்யா.
சோனாக்ஷி சின்ஹா, ராணி முகர்ஜி
ரஜினியுடன் நடித்துள்ள இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் அதிகப்படியான உடல் எடை முன்பு பலரால் விமர்சிக்கப்பட்டது. அதை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டதாகவும் தேவைப்படும்போது கடுமையாக எதிர்த்ததாகவும் கூறியுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
கமலுடன் ‘ஹே ராம்’ படத்தில் நடித்த ராணி முகர்ஜியும் சற்று பூசினாற்போல் காணப்படுவார். அவரையும் சிலர் விமர்சிக்க, “அழகு என்பது மனநிலையைப் பொறுத்தது,” என்று பதிலடி கொடுத்தார்.
எல்லா காலகட்டங்களிலும் உடல் மெலிந்து இருப்பதுதான் அழகு என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அழகு என்பதற்கு அளவுகோல்கள் ஏதுமில்லை. அனைவரும் அழகானவர்கள்தான். அனைவரும் என்பது உடலையும் உள்ளடக்கியதுதான்.
கிரேஸ்
இன்றைய தேதியில் பிற மொழிகளின் நிலவரம் என்னவோ தெரியவில்லை. ஆனால், மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் உருவக்கேலி குறித்த கவலை இல்லாமல் உள்ளனர்.
‘பறந்து போ’ படத்தின் நாயகியான மலையாள நடிகை கிரேஸ், மலையாளத்தில் வெற்றிபெற திறமைதான் முக்கியம் என்கிறார்.
அங்கு உடல் எடையை யாரும் கவனிப்பதில்லை, அது குறித்து கவலைப்படுவதில்லை என்று சொல்பவர், ‘ஜீரோ சைஸ்’ என்ற அளவுக்கு தன் உடல் இளைக்க வேண்டும் எனத் தாம் ஒருபோதும் விரும்பவில்லை என்கிறார். அவ்வாறு உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்பவர்களை, தாம் பொருட்படுத்துவதில்லை என்றும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.